செய்தியாளர்: ரா.சிவபிரசாத்
பொள்ளாச்சியை அடுத்த அம்மே கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் சத்யா. இவர், தனது மூன்று வயது குழந்தை நைனிகா மற்றும் பாட்டியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், இன்று காலை அங்கு வந்த சத்யாவின் உறவினரான பாலாமணி என்பவர் சத்யாவின் குழந்தை நைனிகாவை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். பாலாமணியின் மகனுடன் நைனிகா விளையாடியதாக தெரிகிறது. ஆனால் சிறிது நேரம் கழித்து அவரை காணவில்லை எனக்கூறப்படுகிறது.
இந்நிலையில், குழந்தை நைனிகா பாலாமணி வீட்டிற்கு பின்புறம் இருக்கும் ஆறடி ஆழமுள்ள நீர்த் தொட்டியில் கிடப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோமங்கலம் காவல் நிலைய போலீசார், குழந்தையின் உடலை கைப்பற்றி அங்கு இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உறவினர் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்ட 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இறப்புக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.