நீட் தேர்வு தோல்வியால் ஏற்படும் தற்கொலைகளை வைத்து அரசியல் கட்சிகள் ஆதாயம் தேடுவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நீட் தேர்வு தோல்வியால் கடந்தாண்டு அரியலூரைச் சேர்ந்த அனிதா என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து நீட் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு போதிய பயிற்சிகளை வழங்க வேண்டும். அப்போதுதான் மாணவர்களின் தற்கொலை முடிவையும், மரணத்தையும் தடுக்க முடியும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்தாண்டும் நீட் தேர்வு தோல்வியால் 2 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் முறையாக பின்பற்ற தவறியதால் தான் தற்கொலைகள் நடந்து விட்டதாகவும், எனவே அரசு அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி அளிக்க வேண்டும் என வழக்கறிஞர் சூர்ய பிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதற்கு நீதிமன்றமும் அனுமதி அளித்திருந்தது. இந்த வழக்கு விசாரணையில் அரசு தரப்பில் பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் அரசை மட்டும் குறைகூறுவது சரியாக இருக்காது. தற்போது அரசியல் கட்சிகள் மாணவர்களின் தற்கொலைகளை வைத்து அரசியல் லாபம் தேட முயற்சிக்கின்றன. தேர்வு குறித்த பயத்தை போக்க தேர்வுக்கு முன்னதாக அரசியல் கட்சிகள் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் அவர்கள் இறந்தபிறகு மாணவர்களின் மரணத்தை வைத்து அரசியல் செய்வது தேவையற்றது என தெரிவித்தார். மேலும் இவ்விவகாரத்தில் அரசு பதிலளிக்க ஏதுவாக 2 வாரத்திற்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.