முத்தமிழ் முருகன் மாநாடு முகநூல்
தமிழ்நாடு

முத்தமிழ் முருகன் மாநாட்டுத் தீர்மானங்கள்: அரசியல் கட்சிகள் எதிர்ப்பு!

PT WEB

திராவிட மாடல் அரசு என்று கூறிக்கொள்ளும் திமுக தலைமையிலான அரசு பழனியில் நடத்தியுள்ள முத்தமிழ் முருகன் மாநாடு ஆளும் கட்சிக்கு எதிர்மறையான விமர்சனங்களை உருவாக்கியுள்ளன. அந்த வகையில்,

“பழனி முருகனை திமுகவினர் கையில் எடுப்பதற்கு என்ன நிர்பந்தம்?” என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

எதிர்த்தரப்பினர் மட்டுமின்றி, கூட்டணியில் உள்ள கட்சிகளும், முருகன் மாநாட்டுத் தீர்மானங்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. “முருகன் மாநாட்டு தீர்மானங்கள் காவிமயமாக இருப்பின் அது நிச்சயம் மறுபரிசீலனைக்கு உரியது” என திமுக கூட்டணிக்கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில், முதலமைச்சரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முத்தமிழ் முருகன் மாநாடு சமய சார்பற்ற தமிழ் அடையாளத்தை புகுத்தும் நல்ல நோக்கத்தோடு நடத்தப்பட்டாலும், அது வகுப்புவாதத்தைத்தான் வலுப்படுத்தும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், "கல்வித் துறைக்குள் சமயத்தை திணிப்பது அரசமைப்புச் சட்ட நெறிக்கு எதிரானது. கல்வியை காவி மயமாக்கும் முருகன் மாநாட்டுத் தீர்மானங்கள் அதிர்ச்சி அளிக்கிறது. பாஜக அரசின் இந்துத்துவ செயல்திட்டத்தை முருகன் பெயரால் செயல்படுத்தும் முயற்சியேயன்றி வேறல்ல” என விமர்சித்துள்ளார்.

ரவிக்குமாரின் விமர்சனத்திற்கு பதிலளித்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத்தலைவர்களில் ஒருவரான தமிழிசை சவுந்திரராஜன், “இதனால்தான் இந்து கோயில்கள் அரசிடம் இருந்து வெளியே வரவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்” எனக் கூறியுள்ளார்.

ஏற்கெனவே நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மேற்கொண்ட வீர தமிழர் முன்னணி பேரணி, பாஜக மாநில தலைவராக எல். முருகன் இருந்தபோது அறுபடை வீடுகளுக்கு வேல் யாத்திரை, தைப்பூசத்திற்கு அதிமுக அரசு அறிவித்த அரசு விடுமுறை என முருகக் கடவுளை மையப்படுத்தி அரசியலாக்கப்பட்ட நிலையில், இப்போது முத்தமிழ் முருகன் மாநாடும் அரசியலாகியுள்ளது.