srm hotel pt web
தமிழ்நாடு

திருச்சி| எஸ்.ஆர்.எம் ஹோட்டல் விவகாரம்.. களத்தில் குதித்த கட்சிகள்.. அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

Prakash J

திருச்சி காஜாமலை பகுதியில் தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறைக்கு சொந்தமான இடத்தை 30 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்து எஸ்.ஆர்.எம் ஹோட்டல் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது.

தஞ்சையில் 1995-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டையொட்டி வெளிநாட்டு பயணிகளை தங்க வைப்பதற்காக அரசுடன் இணைந்து தனியார் நிறுவனங்கள் இதுபோன்ற ஹோட்டல்களை கட்டின.

அதன் அடிப்படையில் தஞ்சையில் கட்டப்பட்ட தஞ்சாவூர் சங்கம் மற்றும் டெம்பிள் டவர், திருச்சியில் கட்டப்பட்ட எஸ்.ஆர்.எம் ஆகிய 3 ஹோட்டல்களின் ஒப்பந்தக் காலம் நேற்றுடன் முடிவடைந்தது. ஆனால் எஸ்ஆர்எம் ஹோட்டலை மட்டும் குறிவைத்து சீல் வைக்கும் முடிவுடன் அதிகாரிகள், காவல் துறையினருடன் சென்றனர்.

மேலும் ஹோட்டலில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை கணக்கெடுக்கும் பணியிலும் அவர்கள் உடனே இறங்கினர். எந்தவித அறிவிப்பும் இன்றி காவல்துறையினருடன் அரசு அதிகாரிகள் வந்ததால், அரசியல் கட்சியினரும் அங்கு திரண்டனர். இதனால் காவல்துறையினருக்கும், அரசியல் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுகுறித்து எஸ்ஆர்எம் தரப்பு வழக்கறிஞர் பிரசாந்த், ”30 வருடங்களுக்கு குத்தகை எடுத்திருக்கிறோம். குத்தகை காலம் நேற்றுடன் முடிந்துள்ளது. இங்கிருந்து காலி செய்ய குறைந்தபட்சம் 3 மாதமாவது எங்களுக்கு வேண்டும். கட்டடத்துக்கான வாடகையை ஒழுங்காக கொடுத்துள்ளோம். கூடுதலாக 7 கோடி ரூபாய் வரவு வைத்துள்ளோம்.

100 கோடி ரூபாய் முதலீடு செய்து இந்த இடத்தை தயார் செய்துள்ளோம். குத்தகை காலத்தை நீட்டித்துத் தருவதாக அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு தந்தனர். ஆனால் உறுதியளித்தபடி அரசு தரப்பில் நடந்துகொள்ளவில்லை” எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க: ”தனிப்பெரும்பான்மை கிடைக்காததற்கு பாஜகவின் ஆணவமே காரணம்” - ஆர்.எஸ்.எஸ். சாடல்

திருச்சி எஸ்.ஆர்.எம். ஹோட்டலை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மூடும் முயற்சியில் திமுக அரசு ஈடுபட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர், ”எஸ்.ஆர்.எம். குழுமத்தின் நிறுவனர் பாரிவேந்தர், பெரம்பலூர் தொகுதியில் திமுக அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேருவை எதிர்த்துப் போட்டியிட்ட காரணத்துக்காக பழிவாங்கும் நடவடிக்கையில் திமுக அரசு ஈடுபட்டுள்ளது. குத்தகை காலத்தை நீட்டிக்க மூன்று முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் புறக்கணித்து வருவது ஜனநாயக விரோதமானது” என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், ”திருச்சி எஸ்.ஆர்.எம். ஹோட்டல் மீது சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நடவடிக்கை எடுக்க முயற்சிப்பது தேவையற்றது. சுற்றுலா வளர்ச்சிக்கழகம் நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப செயல்பட வேண்டுமே தவிர, அரசியல் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அணுகக்கூடாது. எஸ்.ஆர்.எம். ஹோட்டல் சம்பந்தமாக சுற்றுலா வளர்ச்சிக்கழகம் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிக்க: அரசு ஒதுக்கிய வீடு.. முஸ்லிம் என்பதால் குடியேற அனுமதிக்காத குடியிருப்புவாசிகள்.. குஜராத்தில் அவலம்!

இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ”அரசியல் காரணங்களுக்காக எஸ்.ஆர்.எம். ஹோட்டலை மூடக்கூடாது. நீதிமன்றம் தடை விதித்தும் எஸ்.ஆர்.எம். ஹோட்டலை தமிழக அரசு மூட நினைப்பது நியாயமல்ல. அரசியலை அரசியலாகப் பார்க்க வேண்டும். வணிகத்தை வணிகமாகப் பார்க்க வேண்டும். ஹோட்டலை மூட நினைப்பது அரசியல் பழிவாங்கும் செயலாகவே தெரிகிறது. குத்தகை விதிகளுக்கு உட்பட்டு எஸ்.ஆர்.எம். ஹோட்டலை தொடர்ந்து நடத்த அனுமதிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஐ.ஜே.கே., “விதிகளை பின்பற்றி செயல்படும் எஸ்.ஆர்.எம். ஹோட்டலை மூடும் அரசு முயற்சி கண்டிக்கத்தக்கது” எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: இனி, செல்போன் நம்பருக்கும் கட்டணம்.. அரசுக்கு டிராய் பரிந்துரை!