குண்டர் சட்டம் புதிய தலைமுறை
தமிழ்நாடு

குண்டர் சட்டத்தில் விவசாயிகள் கைது.. அரசியல் தலைவர்கள் கண்டனம்!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்திற்கு எதிராக போராடிய விவசாயிகள் 20 பேர் கைதான நிலையில், 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

PT WEB

மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்திற்கு எதிராக கடந்த 126 நாட்களாக காத்திருப்பு போராட்டம், சாலைமறியல், நடைபயணம் என பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 20 விவசாயிகள் கைது செய்யப்பட்ட நிலையில், அருள், பச்சையப்பன், மாசிலாமணி, தேவன், பாக்யராஜ், சோழன், விஜயன் ஆகிய 7 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது
செய்யப்பட்டுள்ளனர்.

மேல்மா சிப்காட் என்ற பெயரில் செய்யாறு சிப்காட் அலகு 3 ல் 3,174 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்திய அரசாணை வெளியீட்டுப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. முப்போகம் விளையும் நிலத்தை தரிசு நிலம் என வகைப்படுத்தி நிலத்தை கையகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக, திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் கடந்த ஜூலை மாதம் 2 ஆம் தேதி தொடங்கிய காத்திருப்பு போராட்டம் 126 நாட்களாக நடைபெற்றது. 

மேலும் அரசு நடத்தும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க விவசாயிகள் மறுப்பு தெரிவித்தனர். இதற்கிடையே, சிப்காட்
விரிவாக்கத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபயணம் சென்றபோது அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த வழக்கில் கடந்த 20 பேர் கடந்த 4ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

இந்நிலையில் 7 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போராட்டம் நடத்தியவர்கள் மீது இதுவரை 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.