ஆம்ஸ்ட்ராங் முகநூல்
தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் | சாலை மறியலில் ஆதரவாளர்கள்... கண்டனத்தை பதிவு செய்யும் அரசியல் தலைவர்கள்!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், படுகொலை செய்யப்பட்டதை எதிர்த்து அவரின் ஆதரவாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த படுகொலைக்கு, அரசியல் தலைவர்கள் தங்களின் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

ஜெனிட்டா ரோஸ்லின்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், நேற்று இரவு தனது பழைய வீட்டின் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தின் அருகே நின்று, தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது, அடையாளம் தெரியாத 8 பேர் சரமாரியாக அவரை வெட்டி கொலை செய்தனர்.

இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த அவரின் ஆதரவாளர்கள், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலை வாங்க மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், செண்ட்ரல் அருகே ஈவேரா பெரியார் சாலையிலும் ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி நாளை சென்னை வருவதாக தெரிவித்துள்ளார். மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்றும் மாயாவதி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி

“மாநிலத்தில் பட்டியலின மக்களின் குரலாக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். நேற்று இவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சமூகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அரசு உடனடியாக கடுமையான / தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்”

முதலமைச்சர் ஸ்டாலின்

“பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது. கொலையில் சம்பந்தப்பட்டவர்களை காவல்துறை இரவோடு இரவாகக் கைது செய்துள்ளது.

திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து வாடும் அவரது கட்சியினர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தரக் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்”

ராகுல் காந்தி

“இந்தப் படுகொலை சம்பவம், மிகவும் அதிர்ச்சி தருகிறது. இவ்விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தமிழக அரசுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர். மேலும் குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை அரசு உறுதி செய்யும் என்று நான் நம்புகிறேன்”

திருமாவளவன்

“பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை: கோழைத்தனமான இந்தக் கொடூரத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்! குற்றவாளிகளைக் குண்டர் தடுப்புக் காவலில் சிறைப்படுத்த வேண்டும்!”

கமல்

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த ஆம்ஸ்ட்ராங் அவர்களின் மறைவு, பட்டியலின மக்களுக்குப் பேரிழப்பாகும். ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் கூலிப் படையினரால், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்”

விஜய்

”இது போன்ற கொடும் குற்றச் சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். சமரசம் இல்லாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்”

மேலும், திமுக எம்.பி கனிமொழி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாமக நிறுவனர் ராமதாஸ், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலா விஜயகாந்த், மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோரும் கண்டனத்தையும் இரங்கலையும் பதிவு செய்துள்ளனர்.