தமிழ்நாடு

’தமிழ்க்கடல்’ நெல்லை கண்ணன் மரணம் - முதல்வர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல்

’தமிழ்க்கடல்’ நெல்லை கண்ணன் மரணம் - முதல்வர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல்

Sinekadhara

உடல்நல குறைவு காரணமாக இலக்கியவாதி, தமிழ்க்கடல் என அழைக்கப்படும் நெல்லை கண்ணன் இன்று அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 78.

நெல்லை டவுன் அம்மன் சன்னதி தெருவில் வசித்து வந்தவர் தமிழ் இலக்கியவாதியும் பிரபல பேச்சாளரும் பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன். இவருக்கு வயது 78. தமிழ்நாட்டின் முக்கிய தலைவர்கள், ஆளுமைகள் மற்றும் பிரபலங்களுடன் நெருங்கி பழகி நட்பாய் இருந்தவர். குறிப்பாக முன்னாள் முதலமைச்சர்கள் காமராஜர், கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்டோருடன் நட்பாக இருந்தவர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த ஜிகே மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி, கே.வி தங்க பாலு ஆகியோரிடம் நெருக்கமாக இருந்தவர். 1992 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலின்போது வேட்பாளராக ஜெயந்தி நடராஜன் மற்றும் இவரது பெயரும் தலைமைக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அப்போது அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 2001 ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். ஜெயலலிதா இவருக்கு ஒரு கார் பரிசளித்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் அவரால் அதிமுகவில் நீண்ட நாட்களாக பயணிக்க முடியவில்லை. ஒரு ஆண்டு இடைவெளியில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பினார்.

தொடர்ந்து இலக்கிய சமய சொற்பொழிவு ஆற்றி வந்தார். தனியார் தொலைக்காட்சி நடத்திய பேச்சாளர்களை உருவாக்கும் நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டவர். 78 வயதானாலும் இவரது பேச்சாற்றலும் நினைவாற்றலும் இலக்கிய நயமும் சிறப்பாக இருக்கும். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். குறுக்குத்துறை ரகசியங்கள், வடிவுடை காந்திமதி, காதல் செய்யாதவர்கள் கல்லறியுங்கள், திக்கணைத்தும் சடைவீசி, பழம் பாடல் புதுக்கவிதை உள்ளிட்ட புத்தகங்கள், கட்டுரைகள் ஆகியவை இவரால் உருவாக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசின் இளங்கோவடிகள் விருது இவருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் நெல்லை கண்ணன் இன்று உடல்நலக்குறைவால் அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின்:

நெல்லை கண்ணன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், ‘’தமிழகத்தின் முதுபெரும்தலைவர்களுடன் நெருங்கி பழகிய நெல்லை கண்ணன் மறைவை அறிந்து வருத்தமுற்றேன்’’ என்று தெரிவித்துள்ளார். 

ஜி.கே.வாசன் எம்பி

"நெல்லைக் கண்ணன் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தம் சிறந்த அடைந்தேன். அவர் பேச்சாளராகவும் , பட்டிமன்ற தலைவராகவும் , இலக்கியவாதியாகவும் திகழ்ந்தவர். நெல்லை கண்ணன் அவர்கள் தன் சிறுவயது முதல் பெருந்தலைவர் காமராஜரால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர் . சிறந்த தேசியவாதி. அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும் , உறவினர்களுக்கும் , நண்பர்களுக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" ஜி.கே.வாசன் எம்பி தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பாரிவேந்தர் எம்பி

அவருக்கு டாக்டர் பாரிவேந்தர் எம்பி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “தாமிரபரணி பாயும் திருநெல்வேலியில் பிறந்த தமிழ்நதி நெல்லைக் கண்ணன். தாவிக் குதித்து வரும் தாமிரபரணி வெள்ளம்போல் இவரது நாவிலும் தமிழாறு வெள்ளமாய்ப் பெருகி கேட்போர் உள்ளங்களை எல்லாம் நனைத்ததுண்டு. “கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்” என்ற வள்ளுவன் குறளுக்கு உதாரணமாய் வாழ்ந்துக் காட்டிய பெருமகன் அவர்! கர்மவீரர் காமராசர் பாதம் தொடர்ந்து நடந்த அவர். கவியரசர் கண்ணதாசனின் கீதத்தின் கீர்த்தியை நாதமாய் முழங்கியவர். பேசாத இலக்கிய அரங்கம் இல்லை; இவர் புகழ் மணம். வீசாத இடம் தமிழகத்தில் இல்லை என்று வாழ்ந்த அந்த இலக்கியச் சிங்கத்தின் கர்ஜனை. எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அரங்கிலும் இரண்டு முறை எதிரொலித்ததை எண்ணிப் பார்க்கிறேன். மேடையிலே வீசிய அந்த மெல்லிய பூங்காற்றின் இனிய ரீங்காரம் இன்று அவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

நெல்லை கண்ணன் உடலுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு சார்பில் இரங்கல் தெரிவித்து கோள்வதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு செயலாளர் இரா.முத்தரசன் அக்கட்சி சார்பாக இரங்கல் வெளியிட்டுள்ளார். அதில், ‘’இலக்கியத் தளத்தில் மட்டுமல்ல அரசியல் களத்தில் கர்மவீரர் காமாராஜரின் தலைமை ஏற்று, சுழன்று, சுழன்று பரப்புரை செய்த முன்னணி தலைவர். இவரது கலாய்ப்பு விமர்சனத்துக்கு உள்ளானோரையும் ரசிக்கச் செய்யும் ஒலி அலைக்கற்றில் நெல்லை கண்ணன் என்றென்றும் வாழ்ந்திருப்பார். நெல்லை கண்ணன் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அன்னாரை பிரிந்து வாடும் அவரது மகன்களுக்கும் இலக்கிய உலக நண்பர்களுக்கும், படைப்பாளர்களுக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.