சென்னை அண்ணாநகரில் உள்ள டவர் மீது திடீரென ஏறிய காக்கி சட்டை அணிந்த காவலர் ஒருவர், தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தார். இதனால் அங்குள்ள பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து உடனடியாக தீயணைப்புத் துறையினர் மற்றும் அண்ணாநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த அண்ணாநகர் தீயணைப்புத் துறையினர் தற்கொலை மிரட்டல் விடுத்த காவலரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அந்த காவலர், “காவல் ஆணையர் எனது கோரிக்கையை கேட்க இங்கு உடனடியாக வரவேண்டும். என்னை மீட்கும் பணியில் ஈடுபட்டால் மேலிருந்து குதித்து விடுவேன்” என தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து இரண்டரை மணிநேர போராட்டத்திற்குப் பிறகு போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், அந்த காவலரை மீட்டனர். இதனையடுத்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவரது பெயர் பரீக் பாட்ஷா (25) என்பதும் 3வது பட்டாலியனைச் சேர்ந்தவர் என்பதும், மெட்ரோ ஸ்டேஷனில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர் என்பதும் தெரியவந்தது.
இந்நிலையில், காவலர் தற்கொலைக்கு முயன்றதற்கு பணிச்சுமை காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து அண்ணா நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.