தலைமைக் காவலர் முரளி file image
தமிழ்நாடு

பலரது உயிரைக் காப்பாற்றி விட்டு இறுதியாக தன் உயிரை விட்ட காவலர் - திருப்பத்தூரில் நிகழ்ந்த சோகம்!

வாணியம்பாடியில் பணியின் போது தலைமைக் காவலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் கஸ்பா பகுதியைச் சேர்ந்தவர் முரளி (42). இவர் வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில்  தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று இரவு பணியில் இருந்தபோது வாணியம்பாடி அருகே உள்ள செட்டி அப்பனூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்தும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து சக காவலர்களுடன் விரைந்து சென்ற முரளி விபத்தில் உயிரிழந்தவர்களை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் படுகாயம் அடைந்த சுமார் 40க்கும் மேற்பட்டவர்களை விரைந்து செயல்பட்டு ஆம்புலன்ஸ் வரவழைத்து அனைவரையும் வாணியம்பாடி மற்றும் வேலூர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதனையடுத்து பணிகளை முடித்துக் கொண்டு காவல் நிலையம் சென்ற இவருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக சக காவலர்கள் இவரை காவல் வாகனத்திலேயே வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு  அழைத்துச்  சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள்  தலைமைக் காவலர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத்  தெரிவித்தனர். இதனை அடுத்து அவரது உடல் பிரேதப்  பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த வேலூர் சரக டி.ஐ.ஜி முத்துசாமி மற்றும் திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி ஆல்பர்ட் ஜான் ஆகியோர் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்குச் சென்று முரளியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். 

விபத்தில் சிக்கிய பலரது  உயிரைக்  காப்பாற்றி  இறுதியாகக்  காவலர் உயிரிழந்த சம்பவம் சக காவலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது உடல் அவருடைய சொந்த ஊரான ஆம்பூர் பகுதியில் காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது.