கடலூரில் இருசக்கர வாகனத்தில் சென்றவரை லத்தியால் தாக்கி மண்டையை உடைத்ததாக, காவலர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடலூர் மாவட்டம் நாரையூரில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவருடன் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்றிருக்கிறார். அப்போது, வேப்பூர் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பாஸ்கர் தலைமையிலான காவலர்கள், விருத்தாசலம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அவ்வழியாக வந்த மூர்த்தியின் வாகனத்தை காவலர்கள் மறித்தபோது, அவர் சாலையின் நடுவே வாகனத்தை நிறுத்தாமல், சாலையோரமாக நிறுத்த முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் வண்டியை நிறுத்தாமல் செல்வதாக நினைத்து ஜெயபால் என்ற காவலர் லத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது. அதில் படுகாயமடைந்த சங்கர் வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வரம்பு மீறி செயல்பட்ட காவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.