வீட்டில் தனியாக இருக்கும் முதியவர்களுக்கு உதவும் வகையில், புதிய முயற்சி ஒன்றை சென்னை காவல்துறை கிழக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணன் எடுத்துள்ளார்.
அவரது அறிவுறுத்தலின் படி, தலைமைச் செயலக காலனி ஆய்வாளர் சரோஜினி தலைமையில் கட்டுப்பாட்டு அறை ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அதில், தனியாக வசிக்கும் முதியவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு ஏதேனும் உதவி தேவை உள்ளதா என நாள்தோறும் காவல்துறையினர் கேட்டறிந்து வருகின்றனர்.
கொரோனா தடுப்பூசி செலுத்துவது, உணவு, மருந்து வாங்கி கொடுப்பது, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் மருத்துவமனையில் அனுமதிப்பது போன்ற உதவிகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர, 044- 23452221 என்ற காவல்துறை உதவி எண்ணை தொடர்பு கொள்பவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன. மக்களை கட்டுப்படுத்துவதை மட்டும் பணியாக செய்யாமல், களத்தில் நின்று உதவியும் செய்து வரும் காவல்துறையினர் நிச்சயம் பாராட்டுக்குரியவர்களே.