ரூ. 4 கோடி விவகாரம் - முகநூல்
தமிழ்நாடு

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி சிக்கிய விவகாரம் - பாஜக நிர்வாகிக்கு போலீஸ் சம்மன்!

பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், பாஜக பிரமுகருக்கு காவல்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

PT WEB

பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், பாஜக பிரமுகருக்கு காவல்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

கடந்த 6ஆம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில், நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான 4 கோடி ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அதைத்தொடர்ந்து, அந்த பணத்தை எடுத்துச்சென்ற நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான Blue Diamond ஓட்டல் மேலாளர் சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து, கடந்த 7ஆம் தேதி, அந்த ஓட்டல் உட்பட பல்வேறு இடங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதுகுறித்து வருமான வரித்துறையினர் ஒருபுறம் விசாரித்து வரும் நிலையில், மறுபுறம் தாம்பரம் காவல்துறையினரும் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில், பாஜக தொழில்துறை மாநில துணைத்தலைவர் கோவர்தனன் என்பவருக்கு சொந்தமான உணவகத்தில் வைத்து ஒரு கோடி ரூபாய் கைமாற்றப்பட்டது தெரியவந்தது.

இந்நிலையில், இதில் சம்பந்தப்பட்ட கோவர்தனனுக்கு காவல்துறை சம்மன் அனுப்பி உள்ளது. விசாரணைக்கு இன்று ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவருக்கு பதிலாக அவரது மகன் கிஷோர் நேரில் ஆஜராகவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த விவகாரத்தில், நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன், அவரது நண்பர்கள் ஜெய்சங்கர், ஆசைத்தம்பி ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.