தமிழ்நாடு

கருணாஸ் நடத்திய யாத்திரை தடுத்து நிறுத்தம்: போலீஸ் கேவலப்படுத்துவதாக கருணாஸ் பேட்டி

கருணாஸ் நடத்திய யாத்திரை தடுத்து நிறுத்தம்: போலீஸ் கேவலப்படுத்துவதாக கருணாஸ் பேட்டி

webteam

திண்டிவனத்தில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் 12 முக்கிய அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தெய்வீக யாத்திரைக்கு சென்ற கருணாஸை காவலர்கள் தடுத்து நிறுத்தினர்.

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்எல்ஏ, 6 நாள் ரத யாத்திரை மேற்கொள்ள உள்ளார். இதனால் இன்று சென்னையில் இருந்து புறப்பட்டு விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வழியாக ரத யாத்திரை வாகனத்துடன் வந்து கொண்டிருந்தார். அப்போது திண்டிவனம் புறவழிச் சாலை அருகே திண்டிவனம் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் கணேசன் தலைமையிலான போலீசார் கருணாஸை தடுத்து நிறுத்தினர்.

இதனால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பிறகு சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. அதன் பின்னர் கருணாஸ் மற்றும் ஆதரவாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சிக்கு புறப்பட்டு சென்றனர்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ், “ மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்ட வேண்டும் போன்ற 12 முக்கிய அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தெய்வீக யாத்திரை நடத்த திட்டமிட்டோம். அதன்படி இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டு 30 மாவட்டங்களுக்கு கடந்து இறுதியாக பசும்பொன்னில் இருக்கக்கூடிய முத்துராமலிங்க தேவர் இடத்தில் நிறைவு செய்ய வேண்டும் என தீர்மானித்தோம்.

அதன்படி சென்னையில் இருந்து 20 வாகனங்களில் புறப்பட்டபோது, உயர் அதிகாரிகள் கேட்டக்கொண்டதின் அடிப்படையில் நானும் எனது பொதுச் செயலாளரும் வந்தோம். திண்டிவனம் அருகே வந்த போது, திண்டிவனம் புறவழிச்சாலையில் இருந்த காவல்துறையினர் யாத்திரையை தடுத்து நிறுத்தினர். ஆனால் நாங்கள் ரத யாத்திரையில் அதிக அளவில் கூட்டங்களை சேர்க்கவில்லை.

முன்னதாக பாமகவினர் நடத்திய போராட்டத்தில் பேருந்து, ரயில்கள் மீது கல்வீசி போராட்டம் நடத்தினார்கள். அதிக அளவு கூட்டங்களை கூட்டினார்கள். அதை அனுமதித்த அரசு எனது நியாயமான பேரணியை தடுப்பது ஏன்? நாங்கள் அனைத்து மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று சென்றோம். எங்களை சாலையில் நிறுத்தி போலீசார் கேவலப்படுத்துகின்றனர்.” என்றார்.

தமிழக முதல்வருக்கு எதிராகவும், சசிகலாவுக்கு ஆதரவாகவும் பேசியதால் அனுமதி மறுக்கப்பட்டதா? சசிகலா சிறையில் இருந்து விடுதலையானால் நேரில் சென்று பார்ப்பீர்களா என கேள்வி எழுப்பியபோது, “ நான் பல ஆண்டுகளாக சசிகலாவுக்கு ஆதரவாகதான் பேசி வருகிறேன். சசிகலா குணமடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.நேரில் சென்று கண்டிப்பாக பார்ப்பேன்” எனக் கூறினார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த சட்டமன்றத் தேர்தலில் எனக்கு எம்எல்ஏ சீட்டு வழங்கி என்னை கௌரவித்தார்கள். ஆனால் தற்போது இருக்கும் அரசு என்னை தடுத்து நிறுத்திக் அசிங்கப்படுத்துகிறது.” என்றார்.