ஜல்லிகட்டு போராட்டத்தின் போது பொது சொத்துகளுக்கு தீ வைக்கவில்லை எனவும், தேன் கூட்டை கலைக்கவே தீ வைக்கப்பட்டதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக ஜல்லிக்கட்டு வன்முறை தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையர் ஓய்வுப்பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கோவை விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய விசாரணை ஆணையர் ஓய்வுப்பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன், ஆணையம் சார்பாக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுமுகம், மருத்துவர்கள், தனியார் கல்லூரி முதல்வர், ரயில்வே ஊழியர்கள் என 18 பேரிடம் இன்று முதல் மூன்று நாட்கள் விசாரணை நடத்தவுள்ளதாக தெரிவித்தவர். இறுதியாக ராகவேந்திரா லாரன்ஸ், ஆர்.ஜே.பாலாஜி, ஹிப் ஆப் தமிழா போன்ற திரைப் பிரபலங்களிடம் விசாரணை நடைபெற்றுள்ளதாக கூறினார். தமிழகத்தில் அதிகமாக மதுரையில் இன்னும் 900 பேருக்கு மேல் விசாரணை செய்ய வேண்டியிருப்பதால், விசாரணை முடிய ஒரு வருட காலமாகும் என கூறியவர், ஜல்லிகட்டு போட்டி நடக்காமல் போனதிற்கு போராட்டகாரர்கள்தான் காரணம் என்றும், காவல்துறையினருக்கு சாதகமாக அலங்காநல்லூர் பகுதி மக்கள் பலர் தெரிவித்ததாக அவர் தெரிவித்தார்.
மேலும் போராட்டத்தின் போது பொது சொத்துகளுக்கு காவல்துறையினர் தீ வைப்பது போன்ற காட்சிகள் வெளியானது தொடர்பாக உதவி, துணை காவல்துறை ஆணையர்களிடம் அடுத்த மாதம் விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும், அதிகாரிகள் என்ற முறையில் என்னை காவல்துறையினர் சந்திப்பதை பற்றி பேசுவது தவறானது என்றார். இதுவரை, சென்னையில் 888 பேரில் 664 சம்மன் அனுப்பப்பட்டு, 210 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது, அதிகபடியாக மதுரையில் 1002 பேரில் 86 சம்மன் அனுப்பப்பட்டு, 57 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், மீண்டும் இறுதியாக கோவையில் விசாரணை நடத்த வரவுள்ளதாக தெரிவித்தார்.