தமிழ்நாடு

பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை மண்ணில் புதைப்பு - பெற்ற தாயே செய்த கொடூரச்செயல்

பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை மண்ணில் புதைப்பு - பெற்ற தாயே செய்த கொடூரச்செயல்

webteam

வலங்கைமான் அருகே பிறந்து இரண்டே நாட்களான பச்சிளம் குழந்தையை மண்ணில் புதைத்த தாயால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுக்கா, வேடம்பூர் தோப்புத் தெரு பகுதியில் மாரியப்பன்- ரேவதி தம்பதியருக்கு ரேணுகா (வயது 33), ரேகா (வயது30), மணிகண்டன் (வயது20), சினேகா (வயது18) உள்ளிட்ட மூன்று மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் மூத்த பெண்ணான ரேணுகாவிற்கு நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அருகே உள்ள திட்டச்சேரி பகுதியைச் சேர்ந்த முத்து என்பவருடன் 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

ரேணுகா - முத்து தம்பதிக்கு 11 வயதில் இரட்டை ஆண் குழந்தையும், 8 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். ரேணுகாவின் கணவர் முத்து கடந்த ஏழு வருடங்களாக இவரை விட்டுப்பிரிந்து திருப்பூரில் பணியாற்றி வருகிறார். ரேணுகா தற்போது தனது மூன்று குழந்தைகளுடன் தன்னுடைய தாய், தந்தை மற்றும் தனது தம்பி, தங்கை சினேகா ஆகியோருடன் வசித்து வருகிறார்.

ரேணுகா குடவாசலில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது இவருக்கு கமலேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கர்ப்பமடைந்த நிலையில் கடந்த 22ஆம் தேதியன்று திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்தவர் குழந்தையை தனது வீட்டில் கொல்லைப்புறத்தில் புதைத்துவிட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. குழந்தையைக் கொன்று புதைத்தாரா? இல்லை குழந்தை இறந்து அதன் பிறகு புதைக்கப்பட்டதா? என்ற கோணத்தில் சம்பவ இடத்திற்கு வலங்கைமான் வட்டாட்சியர் மற்றும் வலங்கைமான் காவல்துறையினர் நேரில் வந்து விசாரணை செய்தனர்.

தொடர்ந்து இன்று வலங்கைமான் வட்டாட்சியர் சந்தான கோபாலகிருஷ்ணன், காவல்துறை ஆய்வாளர் ராஜா முன்னிலையில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் ரவீந்திர பாபு தலைமையில் புதைக்கப்பட்ட குழந்தையை தோண்டி எடுக்கப்பட்டு அந்த இடத்திலேயே உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. 

ரேணுகாவின் தந்தை, தங்கை மற்றும் அவரது குழந்தைகள் மட்டும் வீட்டில் உள்ள நிலையில் ரேணுகா மற்றும் அவருடைய தாய் தற்போது தலைமறைவாகியுள்ளனர். வலங்கைமான் காவல்துறையினர் ரேணுகா மீது வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.