திருவான்மியூரில் காவலாளியிடம் 8 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை கொடுத்து ஏடிஎம்மில் டெபாசிட் செய்ய சொல்லிவிட்டு தப்பி ஓடிய நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
சென்னை அடையாறு எல்.பி சாலையில் தனியாருக்கு சொந்தமான கட்டடத்தில் எஸ்பிஐ வங்கி செயல்பட்டு வருகின்றது. இக்கட்டடத்தில் அதே பகுதியைச் சேர்ந்த கர்ணன்(42), என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வருகின்றார்.
இந்நிலையில் மாலை காவலாளி கர்ணன் வேலையில் இருந்தபோது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கர்ணனிடம் 8 ஆயிரம் ரூபாய், 2000 ரூபாய் நோட்டுகள் மூன்றும், 500 ரூபாய் நோட்டுகள் நான்கும் கொடுத்துள்ளார். ஒரு பேப்பரில் வங்கிக்கணக்கு எண்ணை எழுதி கொடுத்துவிட்டு நான் அவசரமாக வெளியே செல்லவேண்டி உள்ளது. ஆகையால் இந்த பணத்தை ஏடிஎம்மில் டெபாசிட் செய்யுமாறு கேட்டு கொண்டுள்ளார்.
காவலாளி கர்ணன் ஒத்துக்கொண்டதை அடுத்து அந்த நபர் பணத்தை கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். பின்னர் காவலாளி கர்ணன் அடையாளம் தெரியாத நபர் கொடுத்துச்சென்ற 8 ஆயிரம் ரூபாயை ஏடிஎம் இயந்திரத்தில் டெபாசிட் செய்ய முயன்றபோது பணத்தை ஏடிஎம் இயந்திரம் ஏற்றுக்கொள்ளவில்லை.
இதனால் குழப்பமடைந்த காவலாளி பணத்துடன் வங்கிக்குச் சென்று மேலாளர் மணிஷேவிடம் நடந்தவற்றைக் கூறி பணத்தை அவரிடம் ஒப்படைத்தார். உடனே எஸ்பிஐ வங்கி மேலாளர் காவலாளி கொடுத்த பணத்தை சோதித்து பார்த்தபோது அது கள்ளநோட்டு என தெரியவந்தது. மேலாளர் இது குறித்து திருவான்மியூர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் மர்ம நபர் கொடுத்த வங்கிக் கணக்கு அயனாவரத்தை சேர்ந்த நிஷாந்தினி என்ற பெயரில் இருப்பது தெரியவந்துள்ளது.