நடிகை கஸ்தூரி pt web
தமிழ்நாடு

நடிகை கஸ்தூரி தலைமறைவு.. தீவிரமாக தேடும் தனிப்படைக் காவல்துறையினர்!

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் நடிகை கஸ்தூரி தலைமறைவாகியுள்ளதாகவும் அவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருவதாகவும் சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

ஜெ.அன்பரசன்

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறு

பிராமண சமூகத்தின் மீது தொடர்ந்து அவதூறு பரப்பப்பட்டு வருவதாகவும், அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் கடந்த 3-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நடிகை கஸ்தூரி

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பிராமண சமூகத்தைச் சேர்ந்த 3000க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் கரு.நாகராஜன், சென்னை மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்த், நடிகை மதுவந்தி, நடிகை கஸ்தூரி, பாட்டாளி மக்கள் கட்சியின் ஊடகப்பிரிவு தலைவர் ஸ்ரீராம், சவுத் இந்தியன் ஃபார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் திருமாறன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி திராவிடர்கள் குறித்தும், திராவிட இயக்கம் குறித்தும், தெலுங்கு மக்கள் குறித்தும் அவதூறாக பேசியதாக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு எழுந்தது.

வலுத்த கண்டனம்

குறிப்பாக, தெலுங்கு மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி பேசியதாக எழுந்த கருத்தானது பலதரப்பு அரசியல் கட்சிகளிடையேயும், தெலுங்கு அமைப்புகள் இடையேயும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நடிகை கஸ்தூரிக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

சர்ச்சை பேச்சு-நடிகை கஸ்தூரி வருத்தம் தெரிவித்தார்

இதனைத் தொடர்ந்து நடிகை கஸ்தூரி தான் பேசிய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து அறிக்கையும் வெளியிட்டிருந்தார். இதனிடையே அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் பொதுச் செயலாளர் நந்தகோபால் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.

4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு

இப்புகார் அடிப்படையில் கடந்த 5 ம் தேதி எழும்பூர் போலீசார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

  • 192 BNS - கலவரம் ஏற்படுத்தும் நோக்கோடு செயல்படுதல்.

  • 196 (1) (a) BNS - சாதி, மதம், இனம், மொழி குறித்து பேசி இரு வேறு பிரிவு மக்களிடையே பிரச்சனை ஏற்படுத்துதல்.

  • 353 (1) (b) BNS - அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக எந்தவொரு நபரையும் குற்றம் செய்யத் தூண்டுதல்.

  • 353 (2) BNS - வதந்தி அல்லது அவதூறு பரப்புதல்.

    உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் நடிகை கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்து எழும்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

தலைமறைவா?

இந்நிலையில் வழக்கு குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக நடிகை கஸ்தூரிக்கு சம்மன் அளிக்க போலீசார் முடிவு செய்திருந்தனர். இதனை அடுத்து, நேற்று நடிகை கஸ்தூரிக்கு சம்மன் அளிக்க போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டுக்கு போலீசார் சென்றனர். ஆனால், அவரது வீடு பூட்டப்பட்டு இருந்தது. மேலும், அவரது செல்போனுக்கு பலமுறை போலீசார் தொடர்பு கொண்ட போதும் அவரது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் தலைமறைவானது போலீசாருக்கு தெரியவந்தது.

நடிகை கஸ்தூரி தலைமறைவு?

இந்த நிலையில் நடிகை கஸ்தூரி தலைமறைவு ஆகிவிட்டதாகவும், அவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருவதாகவும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.