திருச்சியில் கல்லூரி மாணவியொருவரை காதலிக்க வற்புறுத்தி கட்டாயப்படுத்தி விஷம் அருந்த செய்ததாக அவரது குடும்பத்தினர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். தொடர் போராட்டத்திலும் சாலை மறியலிலும் ஈடுபட்ட 18 பேரை (பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உட்பட) காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் நொச்சிவயல் புதூரைச் சேர்ந்தவர் வித்யா லட்சுமி (வயது 19). இவர் தனியார் கல்லூரியில் பி காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 12ஆம் தேதி வீட்டில் உடல்நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மாணவியின் உடலில் விஷம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததால், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவி நேற்று உயிரிழந்தார்.
மாணவி உயிரிழப்பதற்கு முன்பாக காவல்துறை மற்றும் மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். வாக்குமூலத்தில் தன்னை காதலிப்பதாக இளைஞர் ஒருவர் தொடர்ந்து பின் தொடர்ந்ததாகவும், அதற்கு மறுத்ததால் அவருடைய நண்பர்கள் இரண்டு பேருடன் சேர்ந்து தான் கல்லூரி முடிந்து வீட்டிற்கு திரும்பும் பொழுது, தன் கைகளை பிடித்தபடி வலுக்கட்டாயமாக ஏதோ ஒன்றை குடிக்க கொடுத்ததாகவும், அதனை குடித்த பிறகே தனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார் என சொல்லப்படுகிறது.
கடந்த 12ஆம் தேதி மாணவிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், 16ஆம் தேதி தான் குடும்பத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். மாணவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் பெல் (BHEL) காவல்துறையினர் மாணவியின் மரணத்தை சந்தேகம் மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பந்தப்பட்ட 18 வயது இளைஞர் கரண் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று மாணவி உயிரிழந்த நிலையில் மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மாணவியின் உடலை வாங்க மறுத்து அவருடைய பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மலைக் கோவில் பகுதியில் திருச்சி -தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடும் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் டிஎஸ்பி தலைமையிலான போலீசார், கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.தொடர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.
திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து நொச்சி வயல் புதூர் கிராமத்திற்கு செல்லும் சாலையில் சாமியானா பந்தல் அமைத்து உயிரிழந்த மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து பேட்டியளித்த மாணவியின் தாய் சாந்தி, தன்னுடைய மகளை காதலிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தி மகள் மறுத்ததால் விஷம் கொடுத்து, அதனால் தன்னுடைய மகள் இறந்து விட்டதாகவும், தன்னுடைய மகளின் இறப்புக்கு காரணமானவர்கள் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவரது தந்தை, தன்னுடைய மகளின் உயிரிழப்பு விவகாரத்தில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் உடலை தங்களிடம் ஒப்படைக்க முயற்சிப்பதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தன்னுடைய மகள் இறப்பதற்கு முன்பு நடந்ததை வாக்குமூலமாக கொடுத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் என சந்தேகமாக இருப்பதாக தெரிவித்தார்.
மாணவியின் உறவினர்கள் தெரிவிக்கையில், “மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான தண்டனை வழங்க வேண்டும். மாணவியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதுடன், ஒரு கோடி நிவாரணம் வழங்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து திருச்சி மாவட்ட எஸ்.பி புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், “மாணவி வித்யாலட்சுமி கடந்த 12ஆம் தேதி விஷம் சாப்பிட்டு தற்கொலை முயன்றுள்ளார். 17ஆம் தேதி வரை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் பெல் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்தார். அப்போது காவல்துறை விசாரணை நடத்திய போது யாரும் தன்னை வற்புறுத்தி விஷம் கொடுக்கவில்லை என்று காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். நேற்று அவருடைய உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பெற்றோர்கள் கோவில் திருவிழா என்பதால் இன்று வாங்கிக் கொள்வதாக ஒப்புக் கொண்டனர். இந்நிலையில் இன்று காலை மற்றவர்கள் இதில் மாணவியை வற்புறுத்தி விஷம் கொடுத்ததாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கெனவே இவருடைய மரணம் சந்தேகத்துக்குரிய மரணம் என போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்” என்றார்.
மேலும் காவல் துறையினரிடம் கேட்ட பொழுது மாணவி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், விசாரணையில் உண்மை தன்மையை பொருத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் கரண் என்ற இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவி சம்பந்தப்பட்டவர்களுடன் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி, தொடர்ந்து திருச்சி எஸ்பி பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இன்று காலை மாவட்ட ஆட்சியரை மீண்டும் சந்திப்பதுடன், மாணவியின் உடலை 10 மணி அளவில் பெற்றுக்கொள்ள உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் நேற்று திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், காவல்துறையினர் அப்புறப்படுத்த முயன்ற பொழுது காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வன்முறையை தூண்டும் வகையில் நடந்து கொண்ட 18 பேரை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்துள்ளனர்.