K. Bhagyaraj  PT
தமிழ்நாடு

’இயக்குநர் பாக்யராஜ் வீடியோவில் சொன்ன தகவல் அடிப்படை ஆதாரமற்றவை’.. TN Fact Check வெளியிட்ட விளக்கம்!

திரு.பாக்யராஜ் அவர்களின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றதாகும். அது போன்ற குற்றச் சம்பவம் ஒன்று கூட மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் பதிவாகவில்லை என மாவட்ட காவல்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

விமல் ராஜ்

“நெஞ்சு பொறுக்குதில்லையே!" - இயக்குநர் கே.பாக்யராஜ் வெளியிட்ட வீடியோ!

இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் நேற்று தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில், நெல்லித்துறை உள்ளிட்ட இடங்களில் தாங்கள் படப்பிடிப்பிற்காகச் சென்ற போது அம்பரபாளையம் ஆற்றில் குளிப்பதற்காகச் சுற்றுலாத் துறையினர் அதிகளவில் வந்து செல்வார்கள்.

அப்போது ஆற்றின் சுழலில் சிக்கி இறந்து போய்விடுவார்கள் என்றும், இப்படி இறந்து போகும் நபர்களின் உடல்களை மீட்க அங்குத் தண்ணீருக்குள் தம் கட்டிக்கொண்டு இருப்பவர்கள் இழுத்துச் சென்று பாறைக்குள் சிக்க வைத்து விடுவார்கள். பின்னர் உடலை மீட்டுக் கொடுக்க வசதிக்கேற்ப பணம் வாங்கிக் கொள்வார்கள். இந்த விஷயம் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது” எனக் கூறியிருந்தார். இந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உண்மை என்ன?

இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் உண்மை அறிவு குழு விளக்கம் ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் பாக்யராஜின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் அளித்துள்ள விளக்கத்தின் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதில், "திரு.பாக்யராஜ் அவர்களின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றதாகும். அதுபோன்ற குற்றச் சம்பவம் ஒன்றுகூட மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் பதிவாகவில்லை. பத்ரகாளியம்மன் கோவில் அருகில் உள்ள ஆற்றுப் பகுதியில் 2022, 2023ல் எவ்வித உயிரிழப்பு சம்பவமும் நடக்கவே இல்லை. வதந்தியை உருவாக்குவதும் பரப்புவதும் குற்றச் செயல்கள்" என குறிப்பிடப்பட்டிருந்தது.