தூத்துக்குடி கூடுதல் எஸ்பி மற்றும் சாத்தான்குளம் டிஎஸ்பி ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னீஸ் ஆகியோர் அடுத்ததடுத்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. அரசியல் கட்சித் தலைவர்கள் திரைப்பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என ஒட்டு மொத்த இந்தியாவே இந்தச் சம்பவத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதனையடுத்து, சாத்தான்குளம் வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசும் அரசாணை வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே சாத்தான்குளம் காவல்நிலையத்தில் இருக்கும் கான்ஸ்டபிள் ஒருவர், மாஜிஸ்திரேட்டிடம் "உன்னால ஒன்னும் புடுங்கமுடியாது டா" என கூறி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மாஜிஸ்திரேட் கேட்ட தரவுகளை தர அவர் மறுப்பதாகவும் மாஜிஸ்திரேட் மதுரை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தார்.
இந்நிலையில் நீதிபதியை தரக்குறைவாக பேசிய காவலர் மகாராஜன் மட்டும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல தூத்துக்குடி மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் D.குமார் மற்றும் சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் C.பிரதாபன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.