தமிழ்நாடு

போர்க்களமான கதிராமங்கலம்: போராட்டக்காரர்கள் மீது தடியடி

Rasus

கதிராமங்கலம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவன எண்ணெய்க் குழாய் கசிவை சரிசெய்ய வந்த அதிகாரிகளை அனுமதிக்க மறுத்து மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

கும்பகோணத்தை அடுத்த கதிராமங்கலம் கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் எண்ணெய் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. கதிராமங்கலம் மக்கள் தொடர்ந்து ஓஎன்ஜிசிக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்று காலை, ஓ.என்.ஜி.சி குழாயில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து எண்ணெய் கசிவை பார்வையிட வந்த அதிகாரிகளை தடுக்க முயன்றபோது பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

இந்நிலையில் எண்ணெய் கசிவு ஏற்பட்ட இடத்திற்கு அருகில் சாலையில் போடப்பட்டிருந்த தடுப்புக்கு தீவைக்கப்பட்டதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.  இதனிடையே, மாவட்ட ஆட்சியர் நேரில் வரும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். எண்ணெய் கசிவு ஏற்பட்டதையடுத்து கதிராமங்கலம் மற்றும் அதனை சுற்றிஉள்ள கிராமங்களைச்சேர்ந்தவர்கள் அங்க பெருமளவில் குவிந்தனர். இதனால் அங்கு தொடர்ந்து பதற்றமான சூழலே நிலவுகிறது.