அரியலூரில் பள்ளி மாணவனின் தலையில் கல்லைப்போட்டு மர்மமான முறையில் கொலை செய்தவர் யார்? என போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் பொற்பதிந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயலலிதா. இவருடைய கணவன் பெயர் மதியழகன். இவர்களுக்கு முருகன் மற்றும் மணிகண்டன் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதா இறந்த நிலையில் தந்தை மதியழகன் வாணந்திரையான்பட்டிணம் கிராமத்தில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு அதே ஊருக்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில் முருகன் டிப்ளமோ படித்து முடித்துவிட்டு அமிர்தராயங்கோட்டை கிராமத்தில் பெரியாம்மா வீட்டில் தங்கியுள்ளார். மணிகண்டன் அரியலூரில் உள்ள மாணவர் விடுதியில் தங்கி அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். சனி, ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு வெள்ளிகிழமை மாலை பொற்பதிந்தநல்லூர் கிராமத்திலுள்ள தனது தாய்வழி பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார் மணிகண்டன்.
அங்கு இரவு வீட்டில் தனியாக தூங்கியபோது மாணவன் தலையில் யாரோ மர்ம நபர்கள் மணிகண்டனின் தலையில் பெரிய கல்லைப்போட்டு கொலை செய்தது தெரியவந்துள்ளது. இது குறித்து தகவலறிந்த தா.பழூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் மாணவனின் பழக்கவழக்கம் சரியில்லை எனவும், இது தொடர்பாக மாணவர்களிடம் விசாரணை நடைபெற்றுவருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.