தூத்துக்குடி அருகே வீட்டின் மாடியில் அழுகிய நிலையில் கிடந்த இளைஞரின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி பூபால்ராயபுரம் முதல் தெருவை சேர்ந்தவர்கள் குமார்- எவரெஸ்ட் மேரி தம்பதியினர். இவர்களுடைய மகன் சஞ்சய்க்கு (19) குடிப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது. அடிக்கடி மது குடித்துவிட்டு தந்தையுடன் தகராறில் ஈடுபடுவார் எனவும் கூறப்படுகிறது. இதனால் வீட்டிற்குள் தந்தையும்- மகனும் ஒருவருக்கு ஒருவர் பேசாமலேயே இருந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக வீட்டிலிருந்து சஞ்சய் மாயமானதாக தெரிகிறது. இதுகுறித்து அவர்களின் பெற்றோரும் பெரிதாக கவலைப்பட்டதாக தெரியவில்லை. இதனைத்தொடர்ந்து இன்று காலை குமார் வீட்டின் மாடிப்பகுதியிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் குமாரிடம் தெரியப்படுத்தவே, அவர் மாடிக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டின் மாடியில் அழுகிய நிலையில் சஞ்சய் இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில் வீட்டில் இருந்த பூச்சி மருந்து பாட்டில் ஒன்று கடந்த சில நாட்களாக காணாமல் போயுள்ளதாக குமார் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே இது கொலையா அல்லது தற்கொலையா என்ற முழு விவரம் தெரியவரும் எனத் தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.