லஞ்சம் பெறுவதாக தொடர்ந்து புகார்கள் வந்ததை அடுத்து, நாகை வெளிப்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் சிவப்பிரகாசத்தை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து தஞ்சை சரக டி.ஐ.ஜி நடவடிக்கை எடுத்துள்ளார்.
நாகை வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சிவப்பிரகாசம். கொரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இவர் வெளிப்பாளையம் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட மளிகை கடை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை திறக்க லஞ்சம் பெற்றதாக கடந்த 20 ஆம் தேதி நாகை எஸ்பிக்கு புகார் வந்தது.
அதனை தொடர்ந்து அவரை ஆயுதப்படைக்கு சென்று பணியில் சேருமாறு எஸ்பி வாய்மொழி உத்தரவிட்டுள்ளார். ஆனால், ஆய்வாளர் சிவபிரகாசம் ஆயுதபடைக்கு செல்லாமல் நாகை அரசு மருத்துவமனையில் நெஞ்சுவலி என உள்நோயாளியாக அட்மிட் ஆகியுள்ளார். இதனை அறிந்த எஸ்பி செல்வநாகரத்தினம் ஆய்வாளர் மீது வந்த புகார்களை வைத்து அவரை பணியிடை நீக்கம் செய்ய காவல் உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தார்.
இதைத்தொடர்ந்து லஞ்சம் பெற்ற புகாருக்காகவும், உயர் அதிகாரிகளின் கட்டளைக்கு கட்டுப்படாத காரணத்தால் ஆய்வாளர் சிவபிரகாசத்தை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து தஞ்சை சரக டி.ஐ.ஜி லோகநாதன் நடவடிக்கை எடுத்துள்ளார். கடைகளை மிரட்டி லஞ்சம் பெற்றதாக சீர்காழியை சேர்ந்த பெண் காவலர் சில தினங்களுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, நாகையில் மீண்டும் ஒரு லஞ்ச புகாரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.