கன்னியாகுமரி மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத அரசு நடுநிலைப் பள்ளியை தத்தெடுத்து, தனியர் பள்ளிகளுக்கு இணையாக ஸ்மார்ட் வகுப்பறைகளை அமைத்த நக்சல் தடுப்புப் பிரிவு ஆய்வாளருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
கன்னியாகுமாரி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஓட்டிய குற்றியாரில் நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. ஆதிதிராவிட பழங்குடியின மக்களின் குழந்தைகள் இந்தப் பள்ளியில் அதிக அளவில் படித்து வருகின்றனர். 15 வருடங்களாக எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருந்து வந்த இந்தப் பள்ளியை கன்னியாகுமரி மாவட்ட நக்சல் பிரிவு ஆய்வாளர் சாம்சன் தத்தெடுத்தார்.
தனியார் பள்ளிகளுக்கு நிகராக இங்கு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலணி, சீருடை ஆகியவற்றை வழங்கி, ஸ்மார்ட் வகுப்பறைகளையும் நிறுவியுள்ளார். மேலும் பல லட்சம் ரூபாய் செலவு செய்து பள்ளிக் கட்டடத்தையும் புதுப் பொலிவாக்கியுள்ளார். இதன் மூலம் பழங்குடியின மக்களின் குழந்தைகள் தற்போது படிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். பெற்றோரும், இந்த மாற்றத்தை ஏற்படுத்திய சாம்சனை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.