தமிழ்நாடு

‘சதுரங்க வேட்டை’ பாணியில் மோசடி - ஸ்கெட்ச் போட்டு பிடித்த போலீஸ்

‘சதுரங்க வேட்டை’ பாணியில் மோசடி - ஸ்கெட்ச் போட்டு பிடித்த போலீஸ்

webteam

‘சதுரங்க வேட்டை’ பாணியில் மோசடியில் ஈடுபட்ட கும்பலை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

எம்.எல்.எம், இரட்டிப்பு பணம், மண்ணுளிப் பாம்பு, இரிடியம் வரிசையில் மீண்டும் ஒரு மோசடி பொருளாக சந்தைக்கு வந்துள்ளது சிவப்பு பாதரசம். உலோகப் பட்டியலில் இல்லாத இதன் மதிப்பு ரூ 3 கோடி என ஆசைக்காட்டி ஒரு மோசடிக்கும்பல் வலம் வந்துள்ளது.

‘சதுரங்கவேட்டை’ திரைப்படம் பாணியில் மோசடியில் ஈடுபட முயன்ற இந்தக் கும்பல் குறித்து ரகசிய தகவல் காவல்துறைக்கு கிடைத்துள்ளது. குறிப்பாக சேலம்-பெங்களூரு பிரதான சாலையிலுள்ள பிரபல காபி கடை ஒன்றில் இந்தக் கும்பல் சிவப்பு பாதரசம் விற்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளது காவல்துறைக்கு தெரியவந்தது. இதனையடுத்து முன்கூட்டியே மாறுவேடத்தில் அங்கு காவல்துறையினர் முகாமிட்டனர்

சிறிது நேரத்தில் அங்கு கூடிய அந்தக் கும்பலை காத்திருந்து சுற்றிவளைத்தனர். பிடிபட்டவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரி பாண்டியராஜன், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சித்தமருத்துவர் கண்ணதாசன், மதுரை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் தங்கபாண்டியன், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பது தெரியவந்தது. இவர்களது செல்போன்களை சோதனை செய்ததில் வீடியோக்கள் சில கிடைத்ததாக கூறப்படுகிறது.

அரிய வகை நோய்களை தீர்க்கும் சிவப்பு பாதரசம் டெமோ காட்சிகள் ஒரு வீடியோவாகவும், அதை வாங்கக்கூடிய நபர் தன் வசம் வைத்திருக்கும் கத்தைகத்தையான ரூபாய் நோட்டுகள் அடங்கிய சூட்கேசுகள் ஒரு வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டிருந்தது. ‘சதுரங்க வேட்டை’ திரைப்படத்தில் வருவது போன்ற இந்த மோசடிக்கும்பல் தங்களுக்குள்ளாகவே இரு கும்பலாக பிரிந்து செயல்பட்டுள்ளனர். ஒருவர் விற்பவர் போலவும், வாங்குபவர் ஒருவர் போலவும் மூன்றாம் நபர் ஒருவரை வரவழைத்து பணத்தாசை காட்டி மோசடி செய்யபவராகவும் இயக்கி வந்துள்ளனர் என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.