தமிழ்நாடு

நெல்லை முன்னாள் மேயரை கொலை செய்தது எப்படி? - விசாரணையில் வெளிச்சம் 

நெல்லை முன்னாள் மேயரை கொலை செய்தது எப்படி? - விசாரணையில் வெளிச்சம் 

webteam

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் திருடப்பட்ட நகைகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. 

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன் மற்றும் பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் கடந்த 23ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக திமுக பிரமுகர் சீனியம்மாள் என்பவரின் மகன் கார்த்திகேயனை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். விசாரணையில் கொலை நடந்தது எப்படி என கார்த்திகேயன் வாக்குமூலம் அளித்திருப்பதாக தெரிகிறது. தான் மட்டுமே 3 பேரையும் கொலை செய்ததாக கார்த்திகேயன் கூறியுள்ளார். 

இதனையடுத்து உமா மகேஸ்வரியின் வீட்டுக்கு கார்த்திகேயனை அழைத்துச் சென்ற காவல்துறையினர், கொலை செய்தது எப்படி என நடித்துக்காட்டும்படி கூறியிருக்கின்றனர். கொலை எப்படி நடந்தது என்பதை கூறுவதற்கு முன் ஏன் நடந்தது எனக்கூறியிருக்கிறார் கார்த்திகேயன். உமா மகேஸ்வரியால் தனது தாய் சீனியம்மாள் திமுகவில் வளர முடியவில்லை என்பதால் சிறுவயது முதலே அவரைக் கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தனக்கிருந்ததாக கூறியுள்ளார். ஜூலை 23ஆம் தேதி மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியின் மீது காவல்துறையினர் கவனம் செலுத்துவார்கள் என்பதால் அந்த நாளை தேர்வு செய்ததாகவும் தெரிவித்திருக்கிறார். 

கொலையை அரங்கேற்றுவதற்கு முன் உமா மகேஸ்வரி வீட்டை காரில் சுற்றி வந்து நோட்டமிட்டுள்ளார் கார்த்திகேயன். அதன்பின் காரை சற்று தொலைவில் உள்ள தேவாலயம் அருகே நிறுத்திவிட்டு உமா மகேஸ்வரியின் வீட்டுக்கு வந்துள்ளார். அவரிடம் உமா மகேஸ்வரியின் கணவர் என்ன விஷயம் எனக்கேட்டுள்ளார். எனது தாய் சீனியம்மாள் உங்களிடம் பேசிவிட்டு வரச்சொன்னார் எனக் கார்த்திகேயன் கூற அதை நம்பி அவரை வீட்டுக்குள் விட்டுள்ளார் முருக சங்கரன். 

உள்ளே சென்றதும் உங்களால்தான் எனது தாயின் அரசியல் வாழ்வு அஸ்தமனமாகிவிட்டது என ஆவேசமாகக் கூறியுள்ளார். உடனே கார்த்திகேயனை வெளியே போகும்படி உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் உமா மகேஸ்வரியை குத்தியுள்ளார் கார்த்திகேயன். அவரைத் தடுக்க முயன்ற முருக சங்கரனுக்கும் கத்திக்குத்து விழுந்தது. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு படுக்கை அறைக்குள் ஓடியுள்ளார் முருகசங்கரன். அவரை விடாமல் துரத்திச் சென்ற கார்த்திகேயன் முருகசங்கரனை கீழே தள்ளி சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். 

அதன்பின் வெளியே வந்த கார்த்திகேயன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த உமா மகேஸ்வரியை மீண்டும் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். இதனையடுத்து ஆதாயக் கொலை போல் இருக்க வேண்டும் என்பதற்காக உமா மகேஸ்வரி மற்றும் முருக சங்கரன் அணிந்திருந்த நகைகளை கழற்றி எடுத்துள்ளார். பீரோவை உடைத்து அதிலிருந்த நகை மற்றும் பணத்தை கலைத்துப் போட்டுள்ளார். 

அந்த நேரத்தில் பணிப்பெண் மாரியம்மாள் வெளியே இருந்து வீட்டுக்குள் வந்துள்ளார். கதவு திறக்கும் சத்தத்தைக் கேட்டு மறைந்து கொண்ட கார்த்திகேயன் உள்ளே வந்த மாரியம்மாளின் உயிரையும் பறித்துள்ளார். தன்னை காட்டிக் கொடுத்துவிடுவார் என்ற பயத்தில் சமயலறைக்கு இழுத்துச் சென்று மாரியம்மாளை கத்தியால் குத்தியும் பாத்திரத்தால் அடித்தும் கொலை செய்துள்ளார் கார்த்திகேயன். 

பின்னர் கைரேகை உள்ளிட்ட தடயங்களை அழித்த அவர், கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் தம்மீதிருந்த ரத்தக்கறையை சுத்தம் செய்து கொண்டு நகைகளையும் எடுத்துக்கொண்டு காரில் தப்பியுள்ளார். நகைகள் மற்றும் கத்தி இருந்த பையை தாமிரபரணி ஆற்றில் வீசிவிட்டு சென்றுவிட்டார். கொலை நடந்தது எப்படி என வாக்குமூலம் அளித்த கார்த்திகேயன் சொன்னதையே திரும்பத் திரும்பக் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி தன்னை ஒரு சைக்கோ என்று அடிக்கடி கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.