தமிழக வெற்றிக்கழகம் முகநூல்
தமிழ்நாடு

தவெக நிர்வாகிகளுக்கு குட் நியூஸ்.. அக்.27 சம்பவம் உறுதி! டிஎஸ்பி உத்தரவு.. நிர்வாகிகளை அழைத்த விஜய்!

யுவபுருஷ்

‘பார்ட்டி ஒண்ணு தொடங்கட்டுமா.. அதிரடி கெளப்பட்டுமா’

அயன் படத்தில் ஒரு வசனம் இடம்பெற்றிருக்கும். தாஸ் செல்லும் காரின் டயரில் இருந்த நட்டுகளை கழட்டி விட்டு விபத்தை ஏற்படுத்தும் வில்லன் கமலேஷ், ‘லட்டுல வச்சேன்னு நெனச்சயா தாஸ்.. நட்டுல வச்சேன்’ என்று பேசியிருப்பார். அந்த வசனத்திற்கேற்ப, 17 நிபந்தனைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று தவெக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளது காவல்துறை. என்னென்ன நிபந்தனைகள்? தவெகவில் என்ன நடக்கிறது என்பதை விரிவாக பார்க்கலாம்.

தமிழக அரசியல் களத்தில் பல கட்சிகள் இருந்தாலும் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் நாதக என தேர்தலில் நான்கு முனைப்போட்டிதான் நிலவி வந்தது. இப்படியான சூழலில், ‘பார்ட்டி ஒண்ணு தொடங்கட்டுமா.. அதிரடி கெளப்பட்டுமா’ என்ற தனது பாடல் வரிகளுக்கு ஏற்ப, யாருமே எதிர்பாராத நேரத்தில் கட்சி தொடங்கியதாக கடந்த பிப்ரவரியில் அறிவித்தார் விஜய். அதுமுதல் உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம், மாவட்ட அளவில் கட்சியை வலுப்படுத்துவது, கொடி, கொடிக்கான பாடல் என்று அதிரடி காட்டி வந்தார்.

அதிகாரப்பூர்வமாக அறிவித்த விஜய்

எந்த ஒரு கட்சிக்கும் அதன் முதல் மாநாடுதான் அடையாளமாகவும், பேர் சொல்லும் விதமாகவும் இருக்கும் என்பதால், அதிலும் கவனம் செலுத்தி வருகிறார் விஜய். அப்படி, இந்த மாதத்திலேயே மாநாடு நடத்த திட்டமிட்ட நிலையில், காவல் துறை அனுமதியில் தாமதம் உள்ளிட்ட காரணங்களால், தள்ளிப்போனது மாநாடு. இந்நிலையில், அக்டோபர் 27ம் தேதி மாலை 4 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை எனும் கிராமத்தில் மாநாடு நடக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் விஜய்.

முந்தைய மாநாட்டுக்கு அனுமதி கேட்டபோது, காவல்துறையினர் 33 நிபந்தனைகளுடன் அனுமதி கொடுத்தனர். தேதி மாற்றப்பட்டதால் மீண்டும் காவல்துறையினரிடம் மனு கொடுத்தார் கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த். கடந்த 21 ஆம் அன்று விழுப்புரம் எஸ் பி அலுவலகத்திற்கு சென்ற ஆனந்த், ஏ டி எஸ்பி திருமாலிடம் மனு அளித்திருந்தார். ஏற்கனவே 33 நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்ததில் சில தளர்வுகள் அளிக்கவேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

என்னென்ன நிபந்தனைகள்?

அதன்படி, மனுவை பரிசீலனை செய்த விக்கிரவாண்டி டிஎஸ்பி நந்தகுமார், அக்டோபர் 27ஆம் தேதி மாநாடு நடத்துவதற்கு அனுமதி அளித்துள்ளார். கொடுக்கப்பட்ட 33 நிபந்தனைகளில், கட்டாயம் 17 நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டுமெனவும் அவர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி,

  • மாநாடு நடைபெறும் நாள் அன்று போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்த கூடாது.

  • வாகனங்கள் பார்க்கிங் செய்ய அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே நிறுத்த வேண்டும்.

  • சாலைகளின் ஓரத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்த கூடாது.

  • கர்ப்பிணிகள், முதியவர்களுக்கு தடுப்புடன் கூடிய இருக்கை வசதிகள் கட்டாயம் இருக்க வேண்டும்.

  • மருத்துவ வசதியுடன் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் மாநாட்டு திடலில் நிறுத்த வேண்டும்.

  • குடிநீர் வசதி, கழிவறை வசதி, உணவு சுகாதாரமான முறையில் வழங்க வேண்டும்.

  • பேனர், வளைவுகள் தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக வைக்க கூடாது.

  • முக்கிய தலைவர் விஜய் மாநாட்டிற்கு வரக்கூடிய வழிகளில் தடுப்புகள் அமைத்திருக்க வேண்டும்.

  • மாநாடு திடலில் எல் இடி திரைகள், சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள், திறந்தவெளி கிணறுகள் மூடப்பட்டிருக்க வேண்டும்

போன்றவை உட்பட மொத்தம் 17 நிபந்தனைகளை கட்டாயம் கடைபிடிக்க உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து மாநாட்டுக்கான ஏற்பாடுகள் குறித்து பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், தலைவர் விஜய் முக்கிய நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.