தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் சிக்கியிருந்த 277 ஊழியர்களை மீட்கவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் டிஜிபி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக் கோரி சீமான் தொடர்ந்த வழக்கில் டிஜிபி சார்பில் தூத்துக்குடி எஸ்.பி முரளி ரம்பா இன்று பதில் மனு தாக்கல் செய்தார். அதில், மே 22ஆம் தேதி 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலவரத்தில் ஈடுபட்டதாகவும், அவர்களை கலைக்க எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மற்றொரு குழுவினர் ஸ்டெர்லைட் குடியிருப்புக்குள் நுழைந்து வாகனங்களுக்கு தீயிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை குடியிருப்பில் சிக்கியிருந்த 150 குடும்பத்தினரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதாலும், ஆட்சியர் அலுவலகத்திலிருந்த 277 ஊழியர்களை மீட்கவுமே துப்பாக்கிச்சூடில் ஈடுபட வேண்டிய நிலை உருவானதாக பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், காவல்துறை வாகனங்கள், கண்காணிப்பு கோபுரங்கள், கண்காணிப்பு கேமராக்கள் என 15 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சேதமடைந்ததாகவும் டிஜிபி ராஜேந்திரன் பதிலளித்துள்ளார்.
துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான 5 வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதால், சிபிஐ விசாரணை தேவையில்லை என்றும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம், அரசு வேலை போன்றவை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சிபிஐ விசாரணை தேவையற்றது என்பதால், மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் டிஜிபி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.