இளைஞர் சுஜித் புதிய தலைமுறை
தமிழ்நாடு

ஹெல்மெட் போட்டாலும் 10 ஆயிரம் அபராதம்? "தெரியாம பண்ணிட்டேன்.. இனிமேல்" போலீஸிடம் கொடுத்த விளக்கம்!

ஹெல்மெட் அணிந்தபடி இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த இளைஞருக்கு 10,000 ரூபாய் அபராதம் விதித்து, வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார்.. இனி இதுபோல் செய்ய மாட்டேன் என்று விளக்கமளித்த இளைஞர்.. நடந்தது என்ன? முழுமையாக பார்க்கலாம்.

யுவபுருஷ்

தென்காசி மாவட்டம் குற்றாலம் பேருந்து நிலையம் பகுதியில் இளைஞர் ஒருவர் விநோதமான தலைக்கவசம் அணிந்தபடி இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்துள்ளார். இதுதொடர்பாக, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆபத்தான முறையில் இளைஞர் ஒருவர், இருசக்கர வாகனம் இயக்குவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில், குற்றாலம் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, இளைஞர் ஒருவர் தலையில் முயல்போல காட்சியளிக்கும் தலைக்கவசம் அணிந்து வாகனத்தில் சுற்றித்திரிந்த காட்சிகள் பதிவாகியிருந்தன.

அந்த இளைஞரை அடையாளம் கண்டு விசாரித்தபோது, அவர் தென்காசியைச் சேர்ந்த 18 வயதான சுஜித் என்பது தெரியவந்தது. தொடர்ந்து இளைஞர் மீது மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து அவர் உபயோகப்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக விளக்கமளித்த சுஜித், “குற்றாலத்துக்கு குளிக்க வரும்போது போட்டு வந்தேன். இதுனால பிரச்சன வரும்னு தெரியாது. இனிமே இப்டி பண்ணமாட்டேன்” என்று கூறியுள்ளார்.