செய்தியாளர்: ஜி.பழனிவேல்
கிருஷ்ணகிரி அருகே செம்மட முத்தூர் கிராமத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் சந்தேகத்திற்கு இடமாக சென்றுள்ளனர். அப்போது ஒரு குழந்தையிடம் வட மாநில தொழிலாளர்கள் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். இதைக் கண்ட குழந்தையின் தாய், வடமாநில இளைஞரிடம் நீங்கள் யார் என்று கேட்டுள்ளார். அப்போது வடமாநில இளைஞர்கள் அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதை அறிந்த ஊர் மக்கள், வட மாநிலத்தைச் சேர்ந்த மூவரையும் தாக்கியுள்ளனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கராஜ் தலைமையிலான போலீசார் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், பெத்ததாளப்பள்ளி பகுதியில் ஒரு ஆட்டோவில் சந்தேகத்திற்கிடமாக வட மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் குழந்தைகள் சென்றுள்ளனர். இதனைக் கண்ட பொதுமக்கள் அவர்கள் குழந்தை கடத்தல் கும்பல் என பிடித்து ஆட்டோ கண்ணாடியை உடைத்து தாக்கியுள்ளனர்.
தகவல் அறிந்து சென்ற போலீசார் அவர்களை மீட்டு கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இதையடுத்து காவல் நிலையம் முன்பு திரண்ட ஏராளமான பொதுமக்கள் பிடித்து வைத்துள்ள வட மாநிலத்தவர்களை வெளியே விட வேண்டும் என முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது போலீசார் குவிக்கப்பட்டு முற்றுகையில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணகிரி தாலுகா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேட்டி
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை பேசியபோது... “கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக குழந்தைகள் கடத்தப்படுவதாக வதந்தி பரவி வருகிறது. வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் அப்படி சந்தேகப்படும் நபர்கள் குறித்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.