ஜக்கி வாசுதேவ் முகநூல்
தமிழ்நாடு

“நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை?”- நீதிமன்ற கேள்வியை அடுத்து ஈஷா யோகா மையத்தில் அதிரடி ஆய்வு!

கோவை ஈஷா யோகா மையத்தின் மீது எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறித்த அறிக்கையை சமர்பிக்குமாறு காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

PT WEB

கோவை ஈஷா யோகா மையத்தின் மீது எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறித்த அறிக்கையை சமர்பிக்குமாறு காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில், இன்று காலை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 6 குழுக்களாக பிரிந்து தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவை வடவள்ளியைச் சேர்ந்த காமராஜ் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். அதில், தனது இரண்டு மகள்களை ஈஷா மையத்தில் யோகா கற்றுக்கொள்ள அனுப்பியதாகவும், ஆனால் அவர்கள் அங்கேயே தங்கிவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

சென்னை உயர்நீதிமன்றம், ஈஷா

தங்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தனது மகள்கள் சிவில் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும், அவர்களை மீட்டுத் தரவேண்டும் என்றும் மனுதாரர் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சிவஞானம் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் இருமகள்களும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதிகள், “ஜக்கி வாசுதேவ் தனது மகளுக்கு திருமணம் செய்துவைத்துவிட்டு இவர்களை துறவிகளாக்குவது ஏன் ?”எனக் கேள்வி எழுப்பினர். தாங்கள் யாருக்கும் எதிராகவும், ஆதரவாகவும் இல்லை என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாகக் கூறினர். ஈஷா யோகா மையத்தின் மீது எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்ற விவரத்தை வரும் 4ஆம் தேதி காவல்துறை சமர்ப்பிக்குமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்தநிலையில், கோவை ஈஷா மையத்தில் மாவட்ட
காவல் கண்காணிப்பாளர் தலைமையில் இன்று காலையிலிருந்து 6 குழுக்களாக பிரிந்து விசாரணை நடைபெற்று வருகிறது. சமூக நலத்துறையினர், குழந்தைகள் நல குழுவினர் என 70 பேர்
இந்த விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

அதில், ஈஷா மையத்தில் இதுவரை எத்தனை பேர் தங்கியிருந்தனர், அவர்களில் எத்தனை பெண்கள் துறவறம் பூண்டுள்ளனர்? ஈஷா வந்த பிறகு காணாமல் போனவர்கள் எத்தனை பேர் உள்ளிட்ட கேள்விகள் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. குறிப்பாக அங்குள்ள பெண் துறவிகள் அனைவரும் தனித்தனியாக விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.