Vehicle Check மாதிரி புகைப்படம்
தமிழ்நாடு

"தேர்தல் முடிஞ்சு ஆறு மாசமாச்சு; இன்னும் பயணப்படி வழங்கல" – காவல்துறையினர் வேதனை

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து ஆறு மாதம் ஆன பிறகும் சிறப்பு பயணப்படி கிடைக்கவில்லை என போலீசார் வேதனை தெரிவித்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: லெனின்

நடந்து முடிந்த 2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலின்போது, அதாவது கடந்த 16.04.2024 முதல் 06.06.2024 வரை 83 நாட்கள் காவல்துறையினர் பல்வேறு இடங்களுக்கு சென்று இரவு பகலாக தேர்தல் பணியாற்றினர். தமிழ்நாடு காவல்துறையில், காவலர்கள் தொடங்கி உயர் காவல் அதிகாரிகள் வரை சுமார் 2 லட்சம் பேர், இந்த தேர்தல் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக இவர்களுக்கு தேர்தல் சிறப்பு பயணப்படி வழங்குவதற்கு 10.04.2024 அன்று நிதித்துறை அனுமதி கொடுத்தது.

Police

அந்த சிறப்பு பயணப்படியை இதுநாள் வரை வழங்காமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. 83 நாட்களுக்கான சிறப்பு பயணப் படியை பெறுவதற்கு அடுத்த உத்தரவு வரும் வரை காத்திருக்க வேண்டும். பின்னர் அறிவிப்பு வந்தவுடன் விண்ணப்பித்து சிறப்பு பயணப்படியை பெற்றுக்கொள்ள வேண்டுமென கடந்த 18.06.2024 அன்று டிஜிபி, காவல்துறையின் அனைத்து அலுவலகங்களுக்கும் கடிதம் அனுப்பினார்.

அதன்பின்னர் நான்கு மாதங்களாகிவிட்டன. இன்னும் பயணப்படி யாருக்கும் கிடைக்கவில்லை. அதற்காக விண்ணப்பிக்கலாம் என்ற டிஜிபியின் உத்தரவு கடிதமும் கிடைக்கவில்லை. அதனை உடனே வழங்க வேண்டும். மேலும், காவல் துறையினருக்கும் சங்கம் அமைக்கும் உரிமையை வழங்க வேண்டுமென காவல்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.