தமிழ்நாடு

அன்புச்செழியனை பிடிக்க முடியாமல் திணறும் காவல்துறை

அன்புச்செழியனை பிடிக்க முடியாமல் திணறும் காவல்துறை

Rasus

திரைப்படத் தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை வழக்கில், சினிமா பைனான்சியர் ‌அன்புசெழியனை பிடிக்க அண்டை மாநிலங்களுக்கு சென்றிருந்த தனிப்படை காவல்துறையினர் ஏமாற்றத்துடன் சென்னை திரும்பியுள்ளனர்.

நடிகர் சசிகுமாரின் உறவினர் மற்றும் அவரது நிறுவனத்தில் இணை தயாரிப்பாளராக பணியாற்றி வந்த அசோக்குமார் கடந்த சில தினங்களுக்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். தற்கொலை தொடர்பாக அசோக்குமார் எழுதி வைத்த கடிதம் சிக்கியது. அதில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் தான் தற்கொலைக்கு காரணம் என எழுதி வைத்திருந்தார். இதுதொடர்பாக சசிகுமார் அளித்த புகாரின் அடிப்படையில், தற்கொலைக்கு தூண்டியதாக அன்புச்செழியன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனிடையே, காவல்துறையினர் தேடுவதை அறிந்த அன்புச்செழியன் தலைமறைவாகி விட்டார். இருப்பினும் அவரை பிடிப்பதற்காக 3 தனிப்படை அமைத்த போலீசார், அன்புச்செழியன் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்வதை தடுப்பதற்காக அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீசும் வழங்கியுள்ளனர். மேலும் அண்டை மாநிலமான பெங்களூர், ஹைதரபாத் ஆகிய நகரங்களில் மு‌காமிட்டு அன்புச்செழியனை பிடிக்க தனிப்படை அதிகாரிகள் தீவிர தேடுதல்
பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அன்புச்செழியனை பிடிக்க முடியாததால் அவர்கள் ‌சென்னை திரும்பியுள்ளனர். அன்புச்செழியனை பிடிக்க எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் காவல்துறையினர் ஆலோசிக்க உள்ளனர்.