தமிழ்நாடு

ஈவு விடுப்பு கேட்டு சமூக வலைத்தளங்களில் வீடியோ: காவலர் பணியிடை நீக்கம்

ஈவு விடுப்பு கேட்டு சமூக வலைத்தளங்களில் வீடியோ: காவலர் பணியிடை நீக்கம்

jagadeesh

ஈவு விடுப்பு கேட்டு சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட காவலர் பணியிடை நீக்கம் செய்து மதுரை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மதுரை ஆயுதப்படை பிரிவின் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வருபவர் அப்துல் காதர் இப்ராஹிம். அரசு விடுமுறை நாட்களில் பணிபுரிந்தால் அதனை ஈடுகட்டும் விடுமுறையை 6 மாதத்தில் எடுத்து கொள்ளலாம் என்ற விதி உள்ள நிலையில், ஆயுதப்படை உதவி ஆணையர் மற்றும் காவல் ஆய்வாளர் சண்முகசுந்தரத்திடம் விடுமுறை கேட்டு விண்ணப்பித்திருந்தார்.

அதற்கு காவல்துறை ஆய்வாளர் அனைத்து காவலர்கள் முன்பும் வைத்து இப்ராஹிமை அவமானப்படுத்தும் விதமாக பேசியதாகவும், இதனால் காவலர் இப்ராஹிம் மிகுந்த மன உளைச்சல் அடைந்ததாகவும் கடந்த மாதம் வீடியோ பதிவு செய்து அதனை சமூக வலைதளங்களான வாட்ஸ் அப், ஃபேஸ்புக்கில் வெளியிட்டிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக சம்மந்தப்பட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மற்றும் காவலர் இப்ராஹிடம் விசாரிக்கப்படும் என ஆயுதப்படை காவல் உதவி ஆணையர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஈவு விடுப்பு கேட்டு சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதோடு, ஊடகங்களில் பேட்டி அளித்த காரணத்தால் ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் காவலர் இப்ராஹிமை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவிட்டுள்ளார். இது தற்போது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.