தமிழ்நாடு

“100 ரூபாய் கொடு.!” - வீடியோ சர்ச்சையில் சிக்கிய போலீஸ்

“100 ரூபாய் கொடு.!” - வீடியோ சர்ச்சையில் சிக்கிய போலீஸ்

webteam

கோவையில் தலைக்கவசம் அணிந்து கொண்டு, அனைத்து ஆவணங்களுடனும் வந்த இளை‌ஞர்களிடம் கட்டாயமாக 100 ரூபாய் வசூலித்த காவலர் குறித்த வீடியோ பரவலாக பகிரப்பட்டு வருகிறது. 

கடந்த சனிக்கிழமை கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஆறு இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் கோவைக்கு வந்து கொண்டிருந்தனர். காருண்யா காவல் நிலையம் அருகே வந்தபோது வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் மாறன், இளைஞர்களை சோதனை செய்துள்ளார். இளைஞர்களிடம் அனைத்து ஆவணமும் இருந்ததையடுத்து, அவர்களின் தகவல்களை வாங்கிக்கொண்டு தலைக்கு நூறு ரூபாய் என 7 பேரிடம் 700 ரூபாய் கொடுத்துச் செல்லும்படி தெரிவித்துள்ளார். தலைக்கவசம் அணிந்து, ஆவணங்களை காட்டிய பிறகும் தங்களிடம் பணம் கேட்பது ஏன் என்று அவர்கள் காவலரிடம் கேட்டுள்ளனர். 

ஆனால், அந்த உதவி ஆய்வாளர், அனைவருக்கும் சேர்த்து 100 ரூபாய் மட்டும் கொடுத்துச் செல்லுமாறு கட்டாயப்படுத்தியதாகத் தெரிகிறது.‌ இதையடுத்து அந்த இளைஞர்கள் தங்களின் பர்சில் இருந்து நூறு ரூபாயை எடுத்து உதவி ஆய்வாளரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் உதவி ஆய்வாளர் மாறன் பணத்தை வாங்கி தனது பாக்கெட்டில் வைத்துக் கொண்டு அவர்களை அனுப்பி வைத்தார். இந்தக் காட்சிகளை அந்த இளைஞர்களில் ஒருவர் தனது தலைக்கவசத்தில் பொருத்தப்பட்டுள்ள சிறிய‌ரக கேமிராவில் பதிவு செய்துள்ளார். 

இந்தக் காட்சிகளை ஜான் என்ற இளைஞர், தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் பலராலும் இந்த வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ காட்சிகள் குறித்து காவல்துறையிடம் கேட்டபோது, கேரளாவிலிருந்து வந்த இளைஞர்களில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து இருந்தவர்கள் தலைக்கவசம் அணியவில்லை என்றும், இதனால் உதவி ஆய்வாளர் அவர்களுக்கு 100 ரூபாய் அபராதம் விதித்ததுடன், ரசீதும் கொடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.