தமிழ்நாடு

மதுபானங்களை இடம் மாற்றம் செய்ய வந்த ஊழியர்கள் - கடையை முற்றுகையிட்ட குடிமகன்கள் 

மதுபானங்களை இடம் மாற்றம் செய்ய வந்த ஊழியர்கள் - கடையை முற்றுகையிட்ட குடிமகன்கள் 

webteam
மதுபானங்களை இடமாற்றம் செய்வதற்காக லாரியில் ஏற்றியபோது கடை திறக்கப்படுவதாக நினைத்து  வாங்க திரண்ட குடிமகன்களை போலீசார் விரட்டி அடித்தனர். 
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. மொத்தம் 21 நாட்கள் போடப்பட்ட தடை உத்தரவு வரும் 14 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கான காய்கறி மற்றும்  மளிகைக் கடைகள் மட்டுமே திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் உள்ளிட்ட மற்ற கடைகள் மூடப்பட்டுள்ளன. சமூக இடைவெளியைப் பேணுவதற்காக இந்தத் தடையாணை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவுக்குப் பிறகும் தமிழகத்தில் கொரோனா தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது.
இந்நிலையில், மதுக் கிடைக்காமல் மதுப்பிரியர்கள் பலர் தவித்து வருகிறார்கள். சிலர் தவறான வழிகளில் கிடைக்கும் போதைப் பொருட்களை வாங்கி பயன்படுத்தி அதன் மூலம் பல விளைவுகளைச் சந்தித்து வருகின்றனர். கேரளாவில் கூட மது கிடைக்காததால் சில தற்கொலைகள் நடந்துள்ளதாகச் செய்தி வெளியானது. 
இந்நிலையில், மதுக்கடையில் உள்ள மது பானங்களை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டி கடையைத் திறந்தபோது அதனைக் கண்ட மதுப் பிரியர்கள் கடையை முற்றுகையிட்ட சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. தமிழக அரசு உத்தரவின் பேரில் டாஸ்மாக் கடையில் வைக்கப்பட்டிருந்த மதுபானங்கள் அனைத்தும் பாதுகாப்பாகத் தனியார் திருமண மண்டபத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறையில் 4 டாஸ்மாக் மதுபானக்கடைகள் உள்ளன. டாஸ்மாக் கடையிலிருந்த மதுபானங்கள் அனைத்தும் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறது.  
டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அம்பிகாபதி மற்றும் மயிலாடுதுறை வட்டாட்சியர் முருகானந்தம் மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி சாமிநாதன் முன்னிலையில் கூறைநாடு டாஸ்மாக் கடையில் உள்ள மதுபானங்களைப் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தனியார் திருமண மண்டபத்தில் வைப்பதற்காக மதுபானங்கள் லாரியில் ஏற்றப்பட்டது. டாஸ்மாக் கடை திறக்கப்படுவதை அறிந்த ஏராளமான குடிமகன்கள் மதுபானங்களை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று அப்பகுதியில் திரண்டனர். உடனடியாக அப்பகுதியில் திரண்ட குடிமகன்களை போலீசார் விரட்டினர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.