தமிழ்நாடு

சொகுசுப் பேருந்தில் ரூ.3 கோடி நகைகள் கொள்ளை - நூதனமாகப் பிடித்த போலீஸ்

சொகுசுப் பேருந்தில் ரூ.3 கோடி நகைகள் கொள்ளை - நூதனமாகப் பிடித்த போலீஸ்

webteam

சேலம் அருகே சொகுசுப் பேருந்தில் கொள்ளையடித்த நகைகளை விற்க வந்த 5 பேரிடமிருந்து 3 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தெலங்கானா பகுதியில் இயங்கி வரும் பிரபல நகைக்கடை ஒன்றில் இருந்து ரூ.3 கோடி மதிப்பிலான நகைகளை எடுத்துக்கொண்டு, கடந்த மாதம் 9ஆம் தேதி திருப்பூர் நோக்கி பேருந்தில் வந்தபோது பேருந்தில் கொள்ளைச் சம்பவம் நடந்ததாக அந்நிறுவனத்தின் மேலாளர் கௌதம் புகார் அளித்திருந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர்.

பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றினர். நகை திருட்டில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 5 பேருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்ததையடுத்து, நகைகளை வாங்குவது போல தகவல் பரப்பி, நூதன முறையில் அவர்களை தருமபுரி மாவட்டத்திற்கு காவல்துறையினர் வரவழைத்தனர்.

அப்போது அந்தக் கும்பலைப் பிடிக்க முயன்றபோது நகைகளைப் போட்டுவிட்டு, அந்தக் கும்பல் தப்பியதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. நகைகளை மீட்ட காவல்துறையினர், தப்பியோடிய நபர்களைத் தேடி வருவதாக தெரிவித்துள்ளனர். திட்டமிட்டு கொள்ளை கும்பலை வரவழைத்த காவல்துறையினர், அவர்களை தப்பியோட விட்டது குறித்த கேள்விகளும், சந்தேகங்களும் தற்போது எழுந்துள்ளன.