அண்ணாமலை pt web
தமிழ்நாடு

100 நாட்களுக்கு தலா 100 கொடிக்கம்பங்கள்.. முதல் நாளிலே எழுந்த சிக்கல்.. அண்ணாமலை ஆவேசம்!

பாஜக கொடிக்கம்பங்களை ஏற்ற அனுமதிக்காதது திமுகவின் பாசிச முகத்தை காட்டுகிறது என தமிழ்நாடு பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.

Angeshwar G

கடந்த 21 ஆம் தேதி சென்னையை அடுத்த பனையூரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் வீட்டில் அனுமதியின்றி 100 அடி உயர பாஜக கொடிக்கம்பம் நடப்பட்டுள்ளதாக புகார் எழுந்த நிலையில் அக்கொடிக்கம்பத்தை காவல்துறையினர் அகற்ற முயன்றனர். அப்போது பாஜகவினர் தடுத்த நிலையில் காவல்துறை மற்றும் பாஜகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பாஜக கொடிக் கம்பம் அகற்றம் செய்யப்பட்டபோது

கொடிக்கம்பத்தை அகற்ற வந்த கிரேன் வாகனத்தின் கண்ணாடியை சேதப்படுத்திய விவகாரத்தில் பாஜக நிர்வாகிகள் மீது ஏழு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பாஜக நிர்வாகிகள் 5 பேரையும் கைது செய்தனர். தலைமறைவான பாஜக முக்கிய நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டியையும் அக்கரை சந்திப்பு பகுதியில் கைது செய்தனர். பாஜக தலைவர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

அண்ணாமலை இல்லத்தில் பாஜக ஆய்வுக் குழு

இதனை அடுத்து தமிழக அரசால் பாஜகவினர் எதிர்கொண்டு வரும் பிரச்னைகள் தொடர்பாக ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட குழுவை கடந்த 22 ஆம் தேதி பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா நியமித்தார். அந்த குழு சமீபத்தில் தமிழ்நாட்டில் தனது ஆய்வினையும் மேற்கொண்டிருந்தது.

இதற்கிடையே கொடிக்கம்பம் அகற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்திருந்த அண்ணாமலை, “அதிகாரத் திமிரில் அராஜகம் செய்து கொண்டிருக்கும் திமுக, தமிழக பாஜகவின் ஒரு கொடிக்கம்பத்தை அகற்றிவிட்டதால் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். நவம்பர் 1ஆம் தேதி தொடங்கி 100 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் தமிழகம் முழுவதும் 100 பாஜக கொடிக்கம்பங்கள் நடப்படும்” என தெரிவித்திருந்தார்.

அண்ணாமலை

அதனடிப்படையில் சென்னையில் உள்ளிட்ட இடங்களில் சில பகுதிகளில் அனுமதிபெற்றும், சில இடங்களில் முறையாக அனுமதி பெறாமலும் கொடிக்கம்பங்களை அமைத்தனர். இதனை அடுத்து பாஜகவின் மூத்த தலைவர்கள் பல இடங்களில் கைது செய்யப்பட்டனர். இதற்கு அண்ணாமலை கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது, “தமிழகம் முழுவதும், பாஜக கொடிக்கம்பம் அமைத்துக் கொடியேற்ற முயன்ற தமிழ்நாடு பாஜக தலைவர்களும், சகோதர சகோதரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். திமுக அரசின் இந்த அதிகார அத்துமீறலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

dindigul bjp

மற்ற கட்சிகளின் கொடிக் கம்பங்கள் அமைக்கப்பட்டிருக்கும் இடங்களில் கூட, பாஜக கொடிக்கம்பம் வைக்க அனுமதிக்காமல் திமுக தனது பாசிச முகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கெல்லாம் தமிழ்நாடு பாஜக பின்வாங்கப் போவதில்லை. 1949 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு சுமார் 75 ஆண்டுகள் அரசியலில் இருக்கும் திமுக, பாஜக தொண்டர்களின் உழைப்பைக் கண்டு பயந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது.

இத்தனை ஆண்டு காலம், போலி தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்து, மக்களை ஏமாற்றிக் கொள்ளையடித்து, குடும்ப முன்னேற்றத்துக்காக மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கும் திமுகவுக்கு, மக்கள் மத்தியில் இறுதிக் காலம் நெருங்கிவிட்டது. திமுகவின் பயம் இனி எப்போதும் தொடரும்” என தெரிவித்துள்ளார்.