தமிழ்நாடு

சாமியார் வேடமிட்ட ‘அன்னபூரணி’ ஏற்பாடு செய்த புத்தாண்டு நிகழ்ச்சிக்கு காவல்துறையினர் தடை

நிவேதா ஜெகராஜா

செங்கல்பட்டில் பக்தர்களுடன் சந்திப்பு ஏற்பாடு செய்திருந்த சாமியார் வேடத்திலுள்ள அன்னபூரணி என்பவரின் நிகழ்ச்சிக்கு காவல்துறையினர் அனுமதி கொடுக்க மறுத்துள்ளனர்.

கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் அன்னபூரணி என்ற ஒரு பெண் ‘தானே அம்பாளின் வடிவம்’ எனக்கூறும் வகையில் ‘நானே கடவுள்’ வகையிலான வீடியோக்கள் சிலவற்றை தொடர்ச்சியாக பதிவிட்டு வருகிறார். கடந்த 2014ம் ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட இவர், அரசு என்ற நபருடன் திருமணத்துக்கு மீறிய உறவில் தான் இருந்து வந்ததாக அந்நிகழ்ச்சியேலேயே குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் அவர் குறிப்பிட்ட அரசு என்ற அந்நபருடன், ஈரோட்டில் அவர் வசித்து வந்துள்ளார்.

அதன்பின்னர் மர்மமான முறையில் அரசு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அன்னபூரணி, அரசுக்கு உருவ சிலையை வடித்து சில காலம் வழிபட்டு வந்துள்ளார். நாளடைவில் ‘அன்னபூரணி அம்மன் தொண்டு நிறுவனம்’ என்ற தொண்டு நிறுவனத்தையும் அந்த பகுதியில் நடத்தி வந்துள்ளார். இவற்றின் தொடர்ச்சியாக தன்னை ‘அன்னபூரணி அம்மன்’ எனக் கூறி, தானே ஆதிபராசக்தியின் அவதாரம் என மக்கள் மத்தியில் பேசிவருகின்றார். இதன் வீடியோக்களே தற்போது இணையத்தில் பரவி வருகிறது. தன்னை அம்மன் எனக் குறிப்பிடும் இவர், தன்னிடம் ஆசிகேட்டு வருவோரை பக்தர்களாக பாவித்து ஆசியும் வழங்கி வருகிறார். கடந்த சில மாதங்களாகவே யூடியூபில் அருள் உரையும் இவர் நிகழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அன்னபூரணி, புத்தாண்டில் புது பொலிவுடன் அம்மன் வடிவத்தில் அறிமுகமாக திட்டமிட்டிருந்தார். இதற்காக வருகின்ற  புத்தாண்டன்று "அம்மாவின் திவ்ய தரிசனம்" என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சி செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கூட்ரோடு அருகே உள்ள வல்லம் என்ற பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்கு முன்னதாகவும் செங்கல்பட்டு மாவட்டம் கோவிலந்தாங்கள் பகுதியில் இந்த மாதம் 19ஆம் தேதி ‘அன்னபூரணி அம்மாவின் திவ்ய தரிசனம்’ என்றொரு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்துதான் புத்தாண்டில் புதுப்பொலிவுடன் அடுத்த நிகழ்ச்சிக்கு அவர் ஏற்பாடு செய்திருந்தனர். இதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ள தகவலின்படி, “இந்த நிகழ்ச்சிக்கு நாங்கள் அனுமதி மறுத்துள்ளோம். இந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்வதற்காக, ஒரு குறிப்பிட்ட நபர் தன்னுடைய தொலைபேசி எண் கொடுத்து, திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்துள்ளார். அவருக்கு தற்பொழுது தொடர்பு கொள்ள முயற்சி செய்து வருகிறோம். இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட காவல்துறையினரிடமும் தொடர்பு கொண்டு பேசி உள்ளோம்” என தெரிவித்துள்ளார். ஈரோடு காவல்துறையினரும் அன்னபூரணியை தேடி வருவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட தொலைபேசி தொடர்பு எண்களையும் அன்னபூரணி தரப்பினர் நிக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.