கைதான திருடர்கள் புதியதலைமுறை
தமிழ்நாடு

தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த திருடர் கும்பலை சுற்றிவளைத்த போலீஸ்... 4 போன்கள் பறிமுதல்!

ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 4 செல்போன்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

யுவபுருஷ்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு பகுதியில் உள்ள பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு ஆம்பூர் பகுதியை சேர்ந்த அஸ்லாம் பாஷா என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் பின்னால் வந்த இளைஞர்கள் அஸ்லாம் பாஷாவை தாக்கிவிட்டு அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணம் ஆகியவற்றை பறித்து சென்றுள்ளனர். இது குறித்து அஸ்லாம்பாஷா ஆம்பூர் கிராமிய காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் புகாரின் பேரில் சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த ஆம்பூர் கிராமிய காவல் துறையினர், தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களிடம் தொடர் வழிப்பறியில் ஈடுப்படும் கொள்ளையர்களை தேடிவந்துள்ளனர்.

அப்பொழுது வெங்கிலி பகுதியில் காவல்ரதுறையினர் இருசக்கர வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அப்பகுதி வழியாக வேகமாக இரு சக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்களை மடக்கிப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் மூவரும் வாணியம்பாடி கோனாமேடு பகுதியைச் சேர்ந்த பசுபதி, மாதவன், வசந்த் என்பது தெரியவந்தது. இவர்கள் மூவரும் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் கிராமப்புற சாலைகளில் தனியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை குறிவைத்து தாக்கி செல்போன் மற்றும் பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்தது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவர்கள் மூவரையும் கைது செய்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் இருந்து 4 செல்போன்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.