தமிழ்நாடு

சீறிப்பாய்ந்த கடத்தல் கார்; சினிமா பாணியில் சேசிங் செய்த போலீசார்

சீறிப்பாய்ந்த கடத்தல் கார்; சினிமா பாணியில் சேசிங் செய்த போலீசார்

webteam

ஆந்திராவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள 1 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்த போலீசார் தப்ப முயன்ற கார் ஓட்டுநரை விரட்டி பிடித்து கைது செய்தனர். 

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் ஒன்று போலீசாரை கண்டதும் சோதனைச் சாவடியில் நிற்காமல் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அசுர வேகத்தில் சென்றது. 

இதையடுத்து போலீசார், 4 கி.மீ.தூரம் காரை விரட்டி பிடிக்க முயன்றனர். இதில், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்ட லாரியின் மீது கார் மோதி விபத்திற்குள்ளானது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த காரை சோதனையிட்ட போது அதில் 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள 1டன் செம்மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது. 

விபத்திற்குள்ளான காரையும் செம்மரக்கட்டைகளையும் பறிமுதல் செய்த போலீசார் காரை ஓட்டி வந்த சாமுவேல் என்ற இளைஞரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளை கும்மிடிப்பூண்டி வனத்துறையிடம், போலீசார் ஒப்படைத்தனர்.