சென்னையில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்த நபரை தாக்கிய போலீசார் மீண்டும் தாக்கப்பட்டவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் பணி நிமித்தமாக சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது ஊரடங்கு சட்டம் அமலில் உள்ளதால் காவலர் சத்யா உட்பட 3 போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். மேலும் ஊரடங்கை மீறி செல்லும் நபர்களுக்கு தோப்புக் கரணம் போடச் சொல்லி நூதன தண்டனையும் அளித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் மூர்த்தியை காவலர் சத்யா தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளார். அப்போது போலீசாருக்கும் மூர்த்திக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த காவலர் சத்யா கையில் வைத்திருந்த லத்தியால் மூர்த்தியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.
இதனைத்தொடர்ந்து அடிவாங்கிய மூர்த்தி, காவலர் சத்யா ஆகியோர் இணைந்து தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், காவலர் சத்யா அடிவாங்கிய மூர்த்தியிடம் மன்னிப்பு கேட்கிறார். பின்னர், மூர்த்தி பேசுகையில், “காவலர்கள் என்னை விசாரிக்கும்போது நான் கொஞ்சம் வார்த்தையை விட்டுவிட்டேன். சத்யாவும், நானும் 14 வருட நண்பர்கள். ஒரே விளையாட்டு மைதானத்தில்தான் பயிற்சி பெற்றோம். அவர் அத்லடிக் பிளேயர். நான் ஃபுட்பால் பிளேயர். ஒரு நண்பர் என்றுகூட பார்க்காமல் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றத்திற்காக தண்டனை வழங்கியுள்ளார். அதில் எந்த தவறும் இல்லை. இதை யாரும் பெரிது படுத்த வேண்டாம். கொரோனா குறித்த பாதிப்பு பொதுமக்களுக்கு புரிய வேண்டும். காவல்துறை, மருத்துவர்கள், துப்புரவு பணியாளர்கள் சாலையில் இறங்கி வேலை செய்கிறார்கள். நமக்கு பரவக்கூடாது என்றுதான் அவர்கள் வீட்டில் இருக்க சொல்கிறார்கள். காவல்துறையினருக்கும் குடும்பம் உள்ளது. எனவே இதை பெரிதுபடுத்தி பரப்ப வேண்டாம். கொரோனாவை தடுக்கும் முயற்சியில் அனைவரும் இணைந்து செயல்படுவோம்.” எனத் தெரிவித்துள்ளார். மேலும், மூர்த்திக்கு சானிடைசர் மற்றும் முகமூடி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை போலீசார் வழங்கி அறிவுறுத்துகின்றனர்.