தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாட தீயணைப்பு துறை பொதுமக்களுக்கு சில அறிவுறுத்தல்களை கொடுத்துள்ளது. அதில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.
அதன்படி சென்னை மாநகரில் தீ விபத்து ஏற்படக்கூடிய 34 பகுதிகள் கண்டறியப்பட்டு அங்கு நீர்தாங்கி வண்டிகள் குழுவினருடன் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு முறையாக உரிமம் பெற்ற கடைகளிலேயே பட்டாசுகளை வாங்க வேண்டும். பெரியவர்கள் மேற்பார்வையிலேயே குழந்தைகள் பட்டாசுகள் வெடிக்க வேண்டும். ஆடையில் தீ பற்றினால் ஓடாமல், தண்ணீர் ஊற்றி அணைக்க வேண்டும். இல்லையேல் தரையில் படுத்து உருள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பட்டாசுகளை காலை 6 மணிக்கு முன்னரும், இரவு 10 மணிக்கு பின்னரும் வெடிக்கக் கூடாது. தீக்காயங்கள் மீது ஒட்டியுள்ள ஆடையை அகற்ற கூடாது. தீக்காயத்தின் மீது எண்ணெய் மற்றும் இங்க் போன்றவற்றை ஊற்றக் கூடாது. பட்டாசுகளை விற்கும் கடை அருகில் பட்டாசு வெடிக்க கூடாது. பெட்ரோல் பங்கு அருகில் பட்டாசுகளை வெடிக்க கூடாது உள்ளிட்ட அறிவுறுத்தல்களும் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் தீயணைப்பு மீட்பு பணிகள் துறையின் சார்பில் பாதுகாப்பான, மகிழ்ச்சியான தீபாவளி கொண்டாடவும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.