கோவையில் நச்சு வாயு தாக்கி மூவர் உயிரிழந்த வழக்கில், நகைப் பட்டறை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கு, அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம் பகுதியில் நகைப் பட்டறை நடத்தி வருபவர் ரவி சங்கர். இவரது பட்டறையில் ஆபரணங்களை தயாரிக்கும்போது சேதாரமாகும் தங்கத் துகள்களை, பல்வேறு ரசாயனக் கழிவுகளுடன், ஆளுயர தொட்டி ஒன்றில் சேமித்து வைப்பது வழக்கம். அப்படி, பல மாதங்களாக சேமித்து வைக்கப்படும் அந்த ரசாயனக் கழிவுகளில் இருந்து தங்கத்துகள் பிரித்தெடுக்கும் பணியில், அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை, கவுரிசங்கர், சூர்யா ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால், ரசாயன கழிவுகளில் இருந்து வெளியேறிய நச்சு வாயு தாக்கியதில் ஏழுமலை, கவுரி சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சூர்யா என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தொழிலாளர்களின் வறுமை நிலையை பயன்படுத்திக் கொள்ளும் நகைப் பட்டறை முதலாளிகள், இதுபோன்ற ஆபத்தான பணிகளில் பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் வழங்காமல் இளைஞர்களை ஈடுபடுத்துவதாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு பேரவையின் பொதுச் செயலாளர் சிவஞானம் குற்றம்சாட்டியுள்ளார்.இந்தச் சம்பவம் தொடர்பாக நகைப் பட்டறை உரிமையாளர் ரவிசங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.