கைதான சிவராமன் புதிய தலைமுறை
தமிழ்நாடு

கிருஷ்ணகிரி | NCC பயிற்சியாளர் என மோசடி செய்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; அம்லபமான பகீர் உண்மைகள்

கிருஷ்ணகிரி அருகே தனியார் பள்ளியில் என்சிசி பயிற்சி முகாமிற்கு சென்ற 13 வயது மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு: தேடப்பட்டு வந்த பயிற்சியாளர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 13 மாணவிகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனத் தகவல்.

PT WEB

செய்தியாளர்: ஜி.பழனிவேல்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கந்திகுப்பம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்றில் கடந்த ஐந்தாம் தேதி முதல் 9ஆம் தேதி வரை தேசிய மாணவர் படையின் என்சிசி முகாம் நடந்துள்ளது. இதில் அந்தப் பள்ளியை சேர்ந்த 17 மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் 13 வயது கொண்ட மாணவி ஒருவரை என்சிசி பயிற்சியாளரும் நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி முன்னாள் கிழக்கு மாவட்ட இளைஞர் பாசறை மாவட்டச் செயலாளருமான சிவராமன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக மாணவி புகார் அளித்ததை அடுத்து, பருகூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிவராமன் மற்றும் தனியார் பள்ளி முதல்வர் சதீஷ் குமார் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதை அறிந்து சிவராமன் தலைமறைவானார்.

இந்நிலையில் மாணவி புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என நேற்று தனியார் பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார், பள்ளியின் தாளாளர் சாம்சன் வெஸ்லி, சமூக அறிவியல் ஆசிரியை ஜெனிஃபர், பயிற்சியாளர்கள் சக்திவேல், சிந்து, சத்தியா, சுப்பிரமணி ஆகிய ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு ஏழு பெரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் முக்கிய குற்றவாளியை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதனிடையே கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலையத்துக்கு உட்பட்ட துரிஞ்சிப்பட்டி அருகே உள்ள பொன்மலைகுட்டை பகுதியில் என்.சி.சி பயிற்சியாளரும் முன்னாள் நாம் தமிழர் கட்சி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளருமான சிவராமன் பதுங்கி இருப்பது போலீசார் கண்டறிந்து சுற்றி வளைத்தனர் அப்போது அவர் போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்து ஓடி உள்ளார். அப்படி பள்ளத்தில் குதித்ததில் அவரின் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் சுதாகர் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

17 மாணவிகள் என்சிசி பயிற்சி முகாமிற்கு சென்ற நிலையில் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மட்டுமே இதுவரை புகார் இருந்தது. அதன்பேரில் சிவராமன் உட்பட 8 பேர் கைதாகினர். ஆனால் அதிர்ச்சி தரும் விதமாக, அடுத்தடுத்த விசாரணையில் மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை

அதன்படி சிவராமன் மேலும் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் நிகழ்ந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மட்டுமன்றி, இவர் உண்மையில் என்.சி.சி பயிற்சியாளரே இல்லையென்றும் தெரியவந்துள்ளது.

பல்வேறு தனியார் பள்ளிகளில் மேற்கண்ட சிவராமன் என்சிசி பயிற்சியாளராக பணியாற்றி வந்துள்ளார். பள்ளிகளுக்கு தாமாக சென்று, ‘நான் ஒரு என்.சி.சி பயிற்சியாளர்’ எனக்கூறி, கணிசமான தொகையில் மாணவிகளுக்கு பயிற்சி தருவதாக கூறி ஏமாற்றி வந்துள்ளார். பல பள்ளிகளுக்கு இவர் இப்படி சென்றுள்ளதால், அங்கும் இதுபோல் மாணவிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழந்துள்ளது. அடுத்தடுத்து தெரியவந்த இந்த அதிர்ச்சி தகவல்கள் குறித்து, போலீசார் வேகமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, இன்று தனியார் பள்ளிக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் அமராவதி விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த சம்பவத்தில் கல்லூரி முதல்வர், தாளாளர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில் பள்ளியின் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அரசுக்கு அறிக்கை அனுப்ப திட்டமிட்டுள்ளனர் அதிகாரிகள்.