நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடிய விவகாரம்: ராமதாஸ் கருத்து புதிய தலைமுறை
தமிழ்நாடு

“நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியது கண்டிக்கத்தக்கது” - பாமக நிறுவனர் ராமதாஸ்

“சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியது கண்டிக்கத்தக்கது; அதனை வீடியோ எடுத்த விசிகவினர் மீது தாக்குதல் நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

PT WEB

செய்தியாளர்: காமராஜ்

திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

“போட்டித் தேர்வு மூலம் அரசு வேலை நியமனம் இருக்க வேண்டும்”

“அரசு துறைகளில் காலிப் பணியிடங்களை நேர்காணல் மூலமாக நிரப்பும்போது, ஊழல் முறைகேடு நடைபெறுகிறது. நேர்காணல் மூலம் மட்டும் நிரப்பக் கூடாது, போட்டித் தேர்வு மூலம் நியமிக்க வேண்டும். காலியாக உள்ள 6 பல்கலைக்கழக துணை வேந்தர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

ராமதாஸ்

தக்காளி, வெங்காயம் விலை உயர்வு குறித்து...

தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதால் நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்க நடவடிக்கை வேண்டும், விலையை கட்டுபடுத்த தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

“ஆன்லைன் மின் கட்டணம்: நிர்பந்திக்க கூடாது“

மின் கட்டணத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே கட்ட வேண்டும் என்று நிர்பந்திக்கக் கூடாது. அப்படி ஆன்லைன் மூலமாக மின் கட்டணம் செலுத்த நேரிட்டால் மின்வாரியத்தில் ஆட் குறைப்பு செய்வதாகிவிடும். இதனால் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி இருக்க நேரிடும்.

சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் போராட்டம் குறித்து...

சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, 8 மணிநேர வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டதில் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர்களுக்கு ஆதரவாக அரசு இல்லாமல் சாம்சங் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது. தொழிற்சங்கம் அமைக்க முடியாது என துணை முதலமைச்சர் தெரிவித்துள்ளார். தொழிலாளர்களின் நலன்களை காவு கொடுத்து விட்டு சாம்சங் நிறுவனத்தின் நலனை அரசு காக்கிறது என்பதை உதயநிதியின் பேச்சு காட்டுவதால் இதற்கு அமைதியான முறையில் தீர்வு காணவேண்டும்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சாம்சங் ஊழியர்கள்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடிய விவகாரம்:

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியது கண்டிக்கத்தக்கது. அதனை வீடியோ எடுத்த விசிகவினர் மீது தாக்குதல் நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பல கோவில்களில் இதேபோல தீட்சிதர்கள் விளையாடக்கூடிய ஆபத்து நேரிடும் என்பதால் தீட்சிதர்கள் மட்டுமே விளையாடக் கூடிய கிரிக்கெட் மைதானத்தை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும்” என தெரிவித்தார்.

ராமதாஸின் செய்தியாளர் சந்திப்பை, கீழ்க்காணும் இணைப்பில் முழுமையாக காணலாம்...