ராமதாஸ், செந்தில் பாலாஜி எக்ஸ் தளம்
தமிழ்நாடு

”செந்தில் பாலாஜி தியாகி என்றால் அவரிடம் ஏமாந்தவர்கள் யார்.?” - முதல்வர் ஸ்டாலினுக்கு ராமதாஸ் கேள்வி!

”செந்தில் பாலாஜி தியாகி என்றால், அவரிடம் பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள் துரோகிகளா” என முதலமைச்சர் ஸ்டாலினை பாமக நிறுவனர் ராமதாஸ் வினவியுள்ளார்.

Prakash J

அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 471 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜிக்கு கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் செந்தில் பாலாஜி கடந்த 26ஆம் தேதி சிறையில் இருந்து வெளியே வந்தார்.

இந்த நிலையில், தற்போது தமிழக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், செந்தில்பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் ஏற்கெனவே பார்த்து வந்த துறையான மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு - ஆயத்தீர்வை துறைகள் மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி - மு க ஸ்டாலின்

அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த செந்தில் பாலாஜியை, தியாகம் செய்தவர் என முதல்வர் பாராட்டியது விமர்சனங்களுக்கு உள்ளானது. இதற்கு எதிர்வினையாற்றிய முதல்வர், செந்தில் பாலாஜியின் தியாகத்தை தான் வாழ்த்தியதை, சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என கூறியிருந்தார்.

இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ”பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழித்த ஒருவரை, ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் இந்த அளவிற்கு இறங்கிச் சென்று போற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு விடுதலை வழங்கவில்லை.

எனவே அவரது சிறைவாசம் தியாகம் இல்லை. தியாகி பட்டம் சூட்டும் அளவுக்கு செந்தில் பாலாஜியை, திராவிட மாடல் வாஷிங் மெஷின், ஊழல்கரை தெரியாத அளவிற்கு வெளுத்து எடுத்துள்ளது. வழக்கு விசாரணை தமிழ்நாட்டில் நியாயமாக நடக்கும் என தோன்றவில்லை. விசாரணையை வேறு மாநில நீதிமன்றத்திற்கு மாற்ற, உச்சநீதிமன்றத்திற்கு தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.