dindigul lok sabha constituency candidates PT
தமிழ்நாடு

மக்களவைத் தேர்தல்: ஐ.பெரியசாமி கோட்டையை கேட்டு வாங்கிய பாமக–திண்டுக்கல் தொகுதியில் போட்டி எப்படி?!

திண்டுக்கல் மக்களவை தொகுதியில் மார்க்சிஸ்ட் சார்பில் சச்சினானந்தம், பாமக சார்பில் திலகபாமா களமிறக்கப்பட்டுள்ளனர். போட்டி எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.

webteam

கோடை காலம் வரும் முன்பே மக்களவை தேர்தல் காரணமாக அரசியல் களம் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்துவிட்டது. தற்போது திண்டுக்கல் மக்களவை தொகுதியில் 2வது முறையாக பாமக வேட்பாளர் களமிறக்கப்பட்டுள்ளார். திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் சார்பில் சச்சிதானந்தம் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த தொகுதியில் போட்டி எப்படி இருக்கும், பாமக வேட்பாளர் போட்டியாக இருப்பாரா? என்பதை பார்க்கலாம்.

election

மக்களவை தேர்தல்:

மக்களவைத் தேர்தல் 2024 வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கியுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும்.மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு தமிழகம், புதுவையில் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் காஞ்சிபுரம் தவிர, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியல் வெளியிட்டுள்ளது. இதில் திண்டுக்கல் தொகுதியில் கவிஞரும், பாமக மாநில பொருளாளருமான திலக பாமா போட்டியிடுகிறார்.

Anbumani Thilaga bama

யார் இந்த திலக பாமா?

எழுத்தாளர், கவிஞர், இலக்கிய பேச்சாளர் என பன்முகத் திறமையாளராக வலம் வரும் திலக பாமா, பாமகவில் மாநில பொருளாளராக பொறுப்பு வகித்து வருகிறார். திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன் பட்டியைச் சேர்ந்த இவர், மதுரையில் கல்லூரி படிப்பை முடித்தார். தற்போது சிவகாசியில் வசித்து வரும் இவர், 2016ம் ஆண்டு சிவகாசி சட்டமன்ற தேர்தலிலும், 2021ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியிலும் பாமக சார்பில் களமிறக்கப்பட்டார்.

கடந்த தேர்தலில் திண்டுக்கல்லில் பாமக தோல்வியை தழுவி இருந்தாலும், சொந்த மண்ணைச் சேர்ந்த திலக பாமாவை களமிறக்கி இருப்பதும், வன்னியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான திண்டுக்கல்லில் மாம்பழம் பரிட்சையமான சின்னமாக மாறியுள்ளதும் பாமகவிற்கு பலமாக பார்க்கப்படுகிறது. இதனால் தான் பாஜக கூட்டணியில் திண்டுக்கல் லோக் சபா சீட்டை பாமக தலைமை கேட்டு வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

சச்சிதானந்தம்

யார் இந்த சச்சிதானந்தம்?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு உறுப்பினர், திண்டுக்கல் மாவட்டச் செயலாளராக இருப்பவர் ஆர்.சச்சிதானந்தம் (53). பி.எஸ்.சி பட்டதாரியான சச்சிதானந்தம்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 30 ஆண்டுகளாக கட்சியின் முழுநேர ஊழியராகவும் பணியாற்றி உள்ளார். 1987ஆம் ஆண்டு இந்திய மாணவர் சங்கத்தில் மாவட்ட துணைச் செயலாளராகவும், திண்டுக்கல் நகரத் தலைவராகவும் பணியாற்றியவர். 1992ஆம் ஆண்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் இணைந்து, 1994-2002 வரை மாவட்டச் செயலாளராக, மாநில செயற்குழு உறுப்பினராக, மாநில துணைச் செயலாளராக பணியாற்றியுள்ளார்.

2004-2007 வரை ஆத்தூர், ரெட்டியார்சத்திரம் ஒன்றியங்கள் இணைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் தாலுகா செயலாளராகவும், அதன் பின்பு ரெட்டியார்சத்திரம் ஒன்றியச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். 2007-2018 வரை தமிழ்நாடு விவசாய சங்கத்தில் மாவட்டச் செயலாளர், மாநில துணைச் செயலாளர் மற்றும் அகில இந்திய கிசான் கவுன்சில் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

தனது 26 வயதில் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், காமாட்சிபுரம் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு, 1996-2006 வரை இரண்டு முறை மக்கள் பிரதிநிதியாக சிறப்பாக பணியாற்றியுள்ளார். 2018ஆம் ஆண்டு முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளராக பணியாற்றி வருகிறார்.

Minister I.Periyasamy

கூடலூர், லந்தக்கோட்டை, கருங்கல் கிராமங்களில் உள்ள விவசாய விளை நிலங்களிலிருந்து சிப்காட்டிற்கு நிலம் எடுப்பதை தடுத்து நிறுத்துவதற்கு கட்சியின் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளை திரட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தி அத்திட்டத்தை கைவிட செய்து விவசாய விளை நிலங்களை பாதுகாத்திருக்கிறார்.

அதேபோல புலையன் இனத்தை மீண்டும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி கொடைக்கானல் துவங்கி சென்னை வரை அம்மக்களை திரட்டி போராட்டம் நடத்தியிருக்கிறார். இப்படியான பல போராட்டங்களில் கைதாகி சிறைக்கும் சென்றிருக்கிறார்.

dindigul bus stand

திண்டுக்கல் மக்களவை தொகுதி:

திண்டுக்கல் மக்களவை தொகுதியில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் தொகுதி தவிர, திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நத்தம், நிலக்கோட்டை ஆகிய 6 தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதியின் பிரதான தொழிலாக விவசாயமும், தோல் தொழிற்சாலைகளும் உள்ளன. பூக்கள் மற்றும் காய்கறிகள் பழனி, ஒட்டச்சத்திரம் பகுதிகளில் காய்கறியும், திண்டுக்கல், நிலக்கோட்டை பகுதிகளில் பூக்கள் சாகுபடியும் அதிகம். தோல் தொழிற்சாலைகள் உள்ளன. கொடைக்கானல் சுற்றுலா தலமாகவும், பழனி ஆன்மிகத் தலமாகவும் உள்ளது.

விவசாயம் பிரதான தொழிலாக இருந்தாலும், கோடை காலத்தில் ஏற்படும் வறட்சி காரணமாக விவசாய பெருமக்கள் பெரும் சவால்களை சந்தித்து வருகின்றனர். மற்றொருபுறம் அதிநவீன தொழிற்சாலைகளால் பூட்டுக்கள் நவீனமாக்கப்பட்டதால், உலகப்புகழ் பெற்ற திண்டுக்கல் பூட்டுத்தொழில் நலிவடைந்து வருகிறது. கழிவுநீர் சுத்திகரிப்பு பிரச்னையால், தோல் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

PMK

மக்களின் நீண்ட கால கோரிக்கைள்:

திண்டுக்கல்லில் அதிகம் விளையக்கூடிய பூக்கள் மற்றும் மாம்பழங்களை பாதுகாக்க குளிர்சாதன கிடங்கு அமைத்து தர வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

திண்டுக்கல்லில் இருந்து மதுரை தேசிய நெடுஞ்சாலையி லுள்ள கீழக்கோட் டை பிரிவில் போக்கு வரத்துக்கு பாதை போட்டும்கூட அதை, கடந்த ஒரு வருடமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளது இதனால் சுமார் 4 கிலோ சுற்றி செல்ல வேண்டிய நிலைக்கு மக்கள் ஆளாகியுள்ளனர்.

திண்டுக்கல்லின் பிரசித்தி பெற்ற விஷயங்களான சின்னாளப்பட்டி சேலை, பூட்டு ஆகிய தொழில்கள் நலிவடைந்து வருவதைக் காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தோல் தொழிற்சாலைகளால் சுற்றுப்புறத்திற்கு ஏற்படும் சுகாதார சீர்கெட்டை தடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.

kodaikanal name board

பாமகவின் வெற்றி வாய்ப்பு எவ்வளவு?

திண்டுக்கல் தொகுதியில் திமுக மற்றும் அதிமுக நேரடியாக போட்டியிடாதது பாமகவிற்கு சாதகம். இந்த நிலையில் ஏற்கனவே அந்த தொகுதியில் பரீட்சியமான பெண் வேட்பாளரை பாமக நிறுத்தி இருப்பது, களத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

PMK Candidates

திண்டுக்கல் தொகுதியில் திமுக மற்றும் அதிமுக நேரடியாக போட்டியிடாதது பாமகவிற்கு சாதகம். இந்த நிலையில் ஏற்கனவே அந்த தொகுதியில் பரீட்சியமான பெண் வேட்பாளரை பாமக நிறுத்தி இருப்பது, களத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

2011 ஆண்டில் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் பாமக போட்டியிட்டது. 2016 தேர்தலிலும் தனித்து களம் கண்டது பாமக. 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டது. 2021 தேர்தலில் ஆத்தூர் சட்டமன்றத் தேர்தலிலும் பாமக களம் கண்டது. தொடர்ந்து திண்டுக்கல்லில் பாமக போட்டியிடுவதால் கணிசமாக வாக்குவங்கியை வைத்திருக்கக் கூடும்.

election commission

முதல் கூட்டத்திலேயே கெத்து காட்டியஐ.பெரியசாமி - டஃப் கொடுக்குமா பாமக?

நீண்ட இடைவெளிக்கு பிறகு சிபிஎம் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடுகிறது. கோவைக்கு பதிலாக இந்த தொகுதி கிடைத்துள்ளது. இருப்பினும் இந்த தொகுதியில் மிகப்பெரிய பலமே ஐ.பெரியசாமி தான். சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற்றவர். சி.பி.எம். சச்சிதானந்தத்தை ஆதரித்து சமீபத்தில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்திற்கு ஐ. பெரியசாமி தலைமை தாங்கினார்.

பாமக வேட்பாளர் திலகபாமா தொடர்ந்து அப்பகுதியில் கட்சி பணி செய்வதால் கட்சி கட்டமைப்பும் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. பாஜகவின் செல்வாக்கு எந்த அளவிற்கு இருக்கும் என்பதை பொறுத்தும் இவருக்கான வாக்குவங்கி கூடும். பெரும்பாலும் போட்டி வலுவாக இருக்க வாய்ப்பு குறைவுதான். பாமக வேட்பாளர் கடும் போட்டியாளராக மாறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.