சௌமியா அன்புமணி  PT WEB
தமிழ்நாடு

பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியமா?

தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் சவுமியா அன்புமணிக்கு 60 கோடி சொத்து இருப்பதாகத் தனது வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.

விமல் ராஜ்

செய்தியாளர் - சே‌.விவேகானந்தன்

தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக, அதிமுக, பாமக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சைகள் உட்பட 45 வேட்பாளர்கள் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த வேட்பு மனுக்களில் வேட்பாளர்கள் அனைவரும் தங்களது அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், வருவாய் மற்றும் கடன் குறித்துத் தெரிவித்துள்ளனர். அவர்களில் முக்கிய மூன்று பிரதான கட்சியை சேர்ந்தோரின் சொத்துவிவரங்களை இங்கே அறியலாம்...

திமுக வேட்பாளர் ஆ.மணி

திமுக வேட்பாளர் ஆ.மணி

திமுக வேட்பாளர் ஆ.மணி, தனக்குச் சொத்து மற்றும் வருவாயாக, கையில் ரொக்கமாக ரூ.50,000, ரூ.8 லட்சம் மதிப்புள்ள 160 கிராம் தங்கம், அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.3,22,50,000 எனவும், தனது மனைவி புவனேஸ்வரி பெயரில் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.4,24,12,000 எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு ரூ.2,12,87,262 கடன் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.

அதிமுக வேட்பாளர் டாக்டர் ஆர். அசோகன்

அதிமுக வேட்பாளர் டாக்டர் ஆர்.அசோகன்

அதிமுக வேட்பாளர் டாக்டர் ஆர்.அசோகன் தன் பெயரில் உள்ள அசையும் சொத்துக்கள் ரூ.38,47,912 உள்ளது எனவும், தனது மனைவி டாக்டர் பாஸ்கின் டிசோசா பெயரில் ரூ.29,53,620 உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது தந்தை பூக்கடை ரவி பெயரில் ரூ.74,99,793 உள்ளது எனவும், தாயார் ராஜாத்தி பெயரில் ரூ.51,76,104 மதிப்பிலும், தம்பி சரண்குமார் பெயரில் ரூ.8,21,121 உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இதன்மூலம் குடும்பத்தில் உள்ளவர்களின் ஒட்டுமொத்த அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.2,12,11,055 மதிப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும் ரூ.1.59 கோடி கடன் உள்ளதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.

பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி 

பாமக சார்பில் போட்டியிடும் சௌமியா அன்புமணி, தனக்கு விவசாயம் சார்ந்த வருவாயாக ரூ.28 லட்சம், விவசாயம் சாராத வருவாயாக ரூ.1,54,04,070 கிடைப்பதாகவும், இவை தவிர, ரூ.20,71,840 மதிப்பிலான 25.90 கிலோ வெள்ளி பொருட்களும், ரூ.1,92,01,120 மதிப்பிலான 2,927 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.1,64,38,835 மதிப்பிலான 151.5 கேரட் வைர நகைகள் ஆகியவை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி

இதில் சௌமியா பெயரில் வருவாய் மற்றும் நகைகள் என மொத்தம் ரூ.5,59,15,865 மதிப்பில் இருப்பதாகக் குறிப்பிடப்பிட்டுள்ளார். மேலும் சவுமியா மற்றும் அவரது குடும்பத்தார் பெயரில் அசையும், அசையா சொத்துக்கள், நகைகள் உள்ளிட்டவையாக ரூ.60,23,83,186 மதிப்பில் சொத்து இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு வகையில் ரூ. 9,15,40,738 கடன் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.

தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் அதிக சொத்து வைத்திருப்பவர் சௌமியா அன்புமணி என்பது குறிப்பிடத்தக்கது.